Thursday, November 4, 2010

புத்தாடை - தீபாவளி ஸ்பெஷல்

அதிகாலை உற்சாகமாய் வந்து சிறுவனை  எழுப்பினாள் அம்மா, கிழக்குமுகம் பார்த்து உட்கார சொல்லி தலைக்கு எண்ணை வைத்து, கையில் சீயக்காய் கிண்ணத்தை கொடுத்து குளித்துவிட்டு வர  சொன்னாள். உறங்கிக்கொண்டே மெதுவாய் தலையில் சீயக்காய் தடவிகொண்டிருந்தான் அந்த சிறுவன். அதை பார்த்து சிரித்த அவன்   தந்தை பாய்ந்து வந்து தலைமுடியை இருகபிடித்து எண்ணை போகும்வரை தேய்த்து இதமான சுடுநீரை ஊற்றி குளிப்பாட்டி விட்டார் . தலையில் ஈரம் காயும்  வரை துண்டால் துவட்டி விட்டு அந்த துண்டையே இடுப்பில் கட்டிவிட்டு செல்லமாக முதுகில்  தட்டி ஓடு என்றார்.துண்டோடு ஓடி சென்று சாமி படங்களுக்கு முன்னே சென்று நின்றால்  புது துணி, பலகாரங்கள், பட்டாசுகள், இனிப்புகள், இவற்றோடு தலை வாழை  இலையில் இட்லி,வடை, சர்க்கரை பொங்கல் குறிப்பாக அவனுக்கு பிடித்த சுழியம்  அனைத்தும் தயாராக அவன்  தாயாருடன்  காத்துகொண்டிருந்தது. எப்பம்மா இதெல்லாம் செஞ்சிங்க என்று ஆச்சிரியமாய் கேட்ட   அந்த சிறுவனுக்கு   ஒரு புன்னகையை மட்டும் பதிலாக சொல்லிவிட்டு கையில் இருக்கும் கிண்ணத்தை அவனிடம் கொடுத்து அதில் இருக்கும் பச்சை நிற மருந்தை  குடிக்க சொன்னாள். அது வெற்றிலை, சீரகம், இஞ்சி  போன்ற சிலவற்றை அரைத்து செய்தது. பிடிக்காவிட்டாலும் புது துணி கையில் கிடைக்கும் வரை என்ன சொன்னாலும் கேட்பான் என்று அவன் தாய்க்கு நன்றாக தெரியும். மருந்தை குடித்துவிட்டு தனது  புதிய  துணிகளை எல்லா துணிகளுக்கும் மேலே வைத்து என்னுடையதுதான் முதலில் இருக்க வேண்டும் என்று தங்கையுடன் சண்டை போட்டுகொண்டிருந்தான். பூஜை தொடங்குகிறது, அப்போது ஒரு சரவெடியை சிறுவன் கையில் கொடுத்து வெளியில் சென்று வெடிக்க சொல்கிறார் அவன் தந்தை. பற்றவைக்க ஒரு கையில் ஊதுபத்தியும் மழை லேசாக பெய்துகொண்டிருந்ததால் மற்றொருகையில் குடையையும் பிடித்துக்கொண்டு ஈரமற்ற ஒரு இடத்தில வெடியை பற்றவைத்துவிட்டு வீட்டினுள் ஓடி செல்கிறான். பூஜைக்கான மணி சப்தமும் சரவெடி சப்தமும் இணைந்து ஒரு புது இசையாகவே அவன் காதில் ஒலிக்கிறது. தனது புதிய உடைகளை பார்த்துக்கொண்டே இருக்கை கூப்பி நின்றுகொண்டிருந்தான்.

  எப்பம்மா பூஜை முடியும் என்று சிணுங்கலாக கேட்டவனிடம் முதலில் சாமியிடம் விழுந்து கும்பிட்டுவிட்டு அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வா என்றாள். ஒரு நொடியில் செய்துவிட்டு அப்பறம் என்றான், படைத்த இலையிலிருந்து சிறிது உணவை எடுத்து காக்காவுக்கு வைத்துவிட்டு வா என்றாள். பொறுமையை இழந்தவனாய் வெடுக்கென்று பிடுங்கி கொண்டு வேகமாக வெளியில் ஓடி கா கா என்று இரண்டு முறை கத்திவிட்டு அம்மா கொடுத்ததை வைத்து விட்டு வேகமாய் ஓடி வந்து துணிகளை எடுக்க சென்றான். அப்பா அம்மா காலில் விழுந்து எழுந்தான் நெற்றியில் விபூதி பூசி ஆசிர்வாதம் செய்தனர். புது துணிகளை அப்பாவிடமிருந்து பெற்றுகொண்டபோது அவன் மகிழ்ச்சி எல்லைகடந்துவிட்டது. பார்த்து  பார்த்து ஆசை ஆசையாய் வாங்கிய புத்தாடை, ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துக் கொண்டே இருந்த அந்த நிமிடம் பரவசமாய் தெரிந்தது அவனுக்கு.
புதிய ஆடை உடுத்தி ராஜநடை போட்டு   அம்மா எப்படி இருக்கிறது, அப்பா என் உடை எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டு பாராட்டுகளை பெற்றுக்கொண்டு ஆவலாக வெளியில் நண்பர்களை காண ஓட முற்பட்டவனை பிடித்து நிறுத்தினாள் அம்மா. சாப்பிட்டுவிட்டுத்தான் வெளியில் செல்ல வேண்டும் என்றாள். இனி அவனை யாராலும் தடுக்க முடியாது இருந்தாலும் தனக்கு பிடித்த சுழியத்தை இரண்டை வாயிலும் இரண்டை கையிலும் எடுத்து கொண்டு வேகமாக வாசலை தாண்டி எகிறி குதித்து ஓட.......... மழையில் பதமாக இளகி இருந்த களிமண்ணில் காலை வைக்க சறுக்கி கொண்டே சென்று சேற்றில் விழுந்தான். புத்தாடை ஒரு நிமிடத்தில் சேற்றாடை ஆனது.

தலையை தொங்க போட்டுக்கொண்டே விரக்தியாக வீட்டிற்குள் நுழைந்தவனிடம் தாய் சிரித்துகொண்டே சொன்னால் இதுக்குதான் இத்தனை நாளாய் தவியாய் தவித்துகொண்டிருந்தாயா? வழக்கம் போல் இந்த தீபாவளியும் பழைய துணியை போட்டுகொண்டு கொண்டாடு, நான் இதை இப்பதே துவைத்து காயபோடுகிறேன் என்று துணிகளை வாங்கி சென்றால். மாலை வரை வெளியே சென்று நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோர் வீட்டிற்கும் சென்று ஆடி பாடி வெடிகளை எல்லாம் வெடித்து தீர்த்துவிட்டு, ஒரு துளி சேறு கூட படாமல் வீட்டினுள் சென்று கொடியில் கிடந்த புது துணிகளை தொட்டு பார்த்தான். மழை காலம் என்பதால் வீட்டின் உள்ளேயே காய போட்டிருந்ததால் இன்னும் ஈரம் இருந்தது. நாளை பள்ளிக்கு புத்தாடை அணிந்து செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் துணிகளை பார்த்துக்கொண்டே படுத்து உறங்கிவிட்டான்.

எனது பள்ளி பருவத்தில் ஒவ்வொரு தீபாவளிக்கும் எங்கள் வீட்டில் நடந்த காட்சிகள்தான் மேலே சொன்ன கதை அதில் வரும் சிறுவன் நானேதான். தீபாவளி என்றவுடன் என்மனக்கண்ணில் தோன்றி மறையும் காட்சிகளைத்தான் இங்கு கதையாக பதிவு  செய்ய முயற்சித்துள்ளேன். இது போன்றொரு பாரம்பரியமான தீபாவளி கொண்டாடி பலவருடங்கள் ஆகிவிட்டது. உங்களுக்கும்தானே?

உங்கள் அனவருக்கும் பொடுசின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் வாயிலாகவோ அல்லது  ஓட்டு போட்டோ தெரிவிக்கவும் ப்ளீஸ்.

Monday, November 1, 2010

கடலுக்கு ஒரு மினியேட்சர் !!!

துபாய் விமான நிலையம்
ஒவ்வொரு பயணம் என்பதும் ஒரு புதிய புத்தகம் படிப்பது போன்றது. புதிய மனிதர்கள், இடங்கள், அனுபவங்கள், ஆச்சரியங்கள், திருப்பங்கள், எதிர்பார்ப்புகள், சுவாரஸ்யங்கள் என எல்லாம் நிறைந்திருக்கும். எதார்த்தத்தை விரும்பும் எனக்கு எப்போதும் எங்காவது ஊர் சுற்றுவது என்றால் உற்ச்சாகமாக கிளம்பிவிடுவேன். அப்படி இருந்தும் சென்ற ஒரு வாரத்தில் மட்டும் சற்று அதிகமாகவே ஊர் ஊராக சுற்றிய  சுற்றில் தலை சுற்றிவிட்டது (முதுகு தெரிஞ்சிதான்னு கேட்க கூடாது). கத்தார்லேர்ந்து ஆச்சாள்புரம் போயிட்டு வந்தேன் ஆனால் வழி எப்படின்னா...

RLIC டு  தோஹா டு  அபுதாபி டு  துபாய் டு  சென்னை டு  ஆச்சாள்புரம் டு  சென்னை டு  துபாய் டு  அபுதாபி டு  துபாய் டு  அபுதாபி டு  தோஹா டு  RLIC

சுருக்கமா சொன்னதுக்கே இவ்வளவு டு இன்னும் விளக்கமா சொன்னா எல்லாரும் தூங்கிடுவிங்கன்னு தெரியும் அதனால நேரா விஷயத்துக்கு போவோமா... இந்திய தொலைகாட்சி முதல் முறையாக என்பது போல் எனது வாழ்கை வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லகூடிய விஷயங்கள் இம்முறை துபாயில் எனக்கு கிடைத்தது. அதற்கு காரணமான எனது அண்ணனுக்கு இந்த பதிவின்  வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
துபாய்

அபுதாபி
 இப்ப ஊர் சுத்த ரெடியா? அபுதாபியிலிருந்து காலை புறப்பட்டு முதலில் சென்றது உலகின் மிகபெரிய பண்கடை கட்டிடமான  "துபாய் மாள்". இது எங்கே இருக்கிறது என்றால் உலகின்  மிக  உயரமான  கட்டிடம்  என்ற பெருமைவாய்ந்த புர்ஜ் அல் அராப் கட்டிடத்திற்கு கீழே பார்வையாளர்களுக்கான  நுழைவாயிலாக அமைந்திருகிறது.  என்னை தவிர மற்றவர்கள் புர்ஜ் அல் அராப் கட்டிடத்திற்கு மேலே ஏற்கனவே சென்று வந்துவிட்டதால் அன்று நாங்கள்  சென்றது  துபாய் மாளில் உள்ள மீன் காட்சியகம் மற்றும் கடல் வாழ் உயிரியல் பூங்கா Dubai Aquarium and Under Water Zoo).

துபாய் மாள் மேற்கூரை
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த மீன் காட்சியகம் உலகின் மிகபெரிய (acrylic) அக்ரலிக் கண்ணாடி பலகையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. (32.88 மீ அகலம்  8.3 மீ உயரம்  750 மி.மீ தடிமன்). இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் இந்த தொட்டியை சுற்றி முழுவதுமாக பக்கவாட்டில் மட்டுமல்லாமல் உள்ளேயும் அதாவது குகை போன்ற அமைப்பில் தண்ணீருக்கு   அடியில் சென்று பார்ப்பது போலவும் தொட்டிக்கு மேலே சென்று பார்ப்பது போலவும் அமைந்திருப்பது கடலுக்குள் சென்று வந்த முழுமையான
அனுபவத்தை தந்தது. அந்த அனுபவத்தை முடிந்த அளவு புகைபடமாக கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்காக.நடுவே காடு போன்ற அமைப்பில் ஒரு உணவகம்


பென்குயின்

இதுவும் ஒருவகை மீன்தான்

புகைபடங்களை பார்த்த பிறகு பதிவோட தலைப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

துபாய் மாளின் ஒரு பகுதிதான் இந்த மீன் காட்சியகம் இன்னும் பல விஷயங்கள் இங்கு பார்த்தோம் மேலும் கடைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு இடம் என பொதுவான பண் கடை கட்டிடத்திற்கே உரித்தான அனைத்தும் இங்கும் இருந்தது .அடுத்ததாக நாங்கள் சென்றது ஒரு பூங்காவிற்கு கிரீக் பார்க்.  பூங்கா என்றவுடன் கொஞ்சம் புல்வெளி உட்கார அங்கங்கு சில நாற்காலிகள் என்ற மரபை மாற்றி பரந்து  விரிந்த புல்வெளி, நீர் நிலை தேக்கங்களின் கரையில் விளையாடி மகிழலாம், சிறுவர்/சிறுமியர் விளையாட பல வகயான அமைப்புகள். எனது அண்ணன் குழந்தைகளுடன் விளையாடி கலைத்து போனது மட்டுமல்ல நாங்களும் குழந்தைகளாகவே மாறி போனோம்.மேலும் கேபிள் கார் பயணம் இங்கு  சிறப்பான ஒன்று,    நாங்கள் சென்றிருந்த நேரம் பழுதடைந்து விட்டதாம் மற்றுமொரு முதல் அனுபவத்தை தவறவிட்ட வருந்தம் எனக்கு. அனால் நாங்கள் அங்கு சென்றதற்கு முக்கியமான காரணமே வேறு,அது மேலும் ஒரு புதிய அனுபவம் எனக்கு. அதுதான் சீல் மற்றும் டால்பின் காட்சியகம்.மீன் வகைகளில் மிகவும் புத்திசாலி டால்பின் என்று எங்கோ  படித்ததை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். பயிற்சியாளர்கள் எழுப்பும் சிறு சப்தம் மற்றும் கை அசைவை  புரிந்துகொண்டு சீல் மற்றும் டால்பின் செய்யும் சாகசங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக டால்பின் அதிலும் மிக உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பந்தை எகிறி சுழன்று வாலால் (கால் பந்து விளையாட்டில் சொல்லப்படும் சிசர் கட் போல) அடித்தது மீண்டும் மீண்டும் கண் முன் வந்து செல்கிறது.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் துபாய் மாளிற்கு சென்றோம் (அடங்க மாட்டோம்ல..) அடுத்த சிறப்பு நிகழ்ச்சி எங்களுக்காக காத்திருந்தது fountain show. மாலை ஏழு மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடங்களுக்கு நிகழ்த்தப்படும் ஒரு இனிமையான காட்சி. ரம்மியமான இசைக்கேற்ப தண்ணீர் நடனம், மகுடிக்கு எழுந்தது   ஆடும்  பாம்பை  போன்று தண்ணீர் மேலே  எழுந்து வளைந்து நெளிந்து ஆடுவதும் அதற்கேற்றார் போல் விளக்குகள் மின்னுவதும் பார்க்க இரண்டு கண்கள்  போதவில்லை. இதே  நேரத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டமான புர்ஜ் அல் அராப் கட்டிடத்தில் இருந்து நட்சத்திரங்கள் விழுவது போன்று மின்விளக்குகளின்  விளையாட்டு வேறு. ஏற்கனவே நேரம் பத்து மணியை தாண்டி விட்டாலும் துபாயிலிருந்து அபுதாபி  வரை  திரும்பி  செல்ல வேண்டியிருதாலும் மேலும் அரை மணி காத்திருந்து  மீண்டும்  ஒருமுறை  அந்த தண்ணீர் நடனத்தை பார்த்துவிட்டுத்தான் சென்றோம்.
இப்படியாக ஒரு நாள் முழுவதும் புது புது அனுபவங்களுடன் மகிழ்ச்சியாக சென்ற மணித்துளிகளை முடித்த அளவு  பதிந்துவிட வேண்டும் என்ற ஆசைதான் இந்த பகிர்வு. மீண்டும் வேற ஒரு நல்ல ஊர்ல சந்திப்போம்.
Related Posts with Thumbnails