Monday, November 1, 2010

கடலுக்கு ஒரு மினியேட்சர் !!!

துபாய் விமான நிலையம்
ஒவ்வொரு பயணம் என்பதும் ஒரு புதிய புத்தகம் படிப்பது போன்றது. புதிய மனிதர்கள், இடங்கள், அனுபவங்கள், ஆச்சரியங்கள், திருப்பங்கள், எதிர்பார்ப்புகள், சுவாரஸ்யங்கள் என எல்லாம் நிறைந்திருக்கும். எதார்த்தத்தை விரும்பும் எனக்கு எப்போதும் எங்காவது ஊர் சுற்றுவது என்றால் உற்ச்சாகமாக கிளம்பிவிடுவேன். அப்படி இருந்தும் சென்ற ஒரு வாரத்தில் மட்டும் சற்று அதிகமாகவே ஊர் ஊராக சுற்றிய  சுற்றில் தலை சுற்றிவிட்டது (முதுகு தெரிஞ்சிதான்னு கேட்க கூடாது). கத்தார்லேர்ந்து ஆச்சாள்புரம் போயிட்டு வந்தேன் ஆனால் வழி எப்படின்னா...

RLIC டு  தோஹா டு  அபுதாபி டு  துபாய் டு  சென்னை டு  ஆச்சாள்புரம் டு  சென்னை டு  துபாய் டு  அபுதாபி டு  துபாய் டு  அபுதாபி டு  தோஹா டு  RLIC

சுருக்கமா சொன்னதுக்கே இவ்வளவு டு இன்னும் விளக்கமா சொன்னா எல்லாரும் தூங்கிடுவிங்கன்னு தெரியும் அதனால நேரா விஷயத்துக்கு போவோமா... இந்திய தொலைகாட்சி முதல் முறையாக என்பது போல் எனது வாழ்கை வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லகூடிய விஷயங்கள் இம்முறை துபாயில் எனக்கு கிடைத்தது. அதற்கு காரணமான எனது அண்ணனுக்கு இந்த பதிவின்  வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
துபாய்

அபுதாபி
 இப்ப ஊர் சுத்த ரெடியா? அபுதாபியிலிருந்து காலை புறப்பட்டு முதலில் சென்றது உலகின் மிகபெரிய பண்கடை கட்டிடமான  "துபாய் மாள்". இது எங்கே இருக்கிறது என்றால் உலகின்  மிக  உயரமான  கட்டிடம்  என்ற பெருமைவாய்ந்த புர்ஜ் அல் அராப் கட்டிடத்திற்கு கீழே பார்வையாளர்களுக்கான  நுழைவாயிலாக அமைந்திருகிறது.  என்னை தவிர மற்றவர்கள் புர்ஜ் அல் அராப் கட்டிடத்திற்கு மேலே ஏற்கனவே சென்று வந்துவிட்டதால் அன்று நாங்கள்  சென்றது  துபாய் மாளில் உள்ள மீன் காட்சியகம் மற்றும் கடல் வாழ் உயிரியல் பூங்கா Dubai Aquarium and Under Water Zoo).

துபாய் மாள் மேற்கூரை
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த மீன் காட்சியகம் உலகின் மிகபெரிய (acrylic) அக்ரலிக் கண்ணாடி பலகையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. (32.88 மீ அகலம்  8.3 மீ உயரம்  750 மி.மீ தடிமன்). இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் இந்த தொட்டியை சுற்றி முழுவதுமாக பக்கவாட்டில் மட்டுமல்லாமல் உள்ளேயும் அதாவது குகை போன்ற அமைப்பில் தண்ணீருக்கு   அடியில் சென்று பார்ப்பது போலவும் தொட்டிக்கு மேலே சென்று பார்ப்பது போலவும் அமைந்திருப்பது கடலுக்குள் சென்று வந்த முழுமையான
அனுபவத்தை தந்தது. அந்த அனுபவத்தை முடிந்த அளவு புகைபடமாக கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்காக.



நடுவே காடு போன்ற அமைப்பில் ஒரு உணவகம்


பென்குயின்

இதுவும் ஒருவகை மீன்தான்

புகைபடங்களை பார்த்த பிறகு பதிவோட தலைப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

துபாய் மாளின் ஒரு பகுதிதான் இந்த மீன் காட்சியகம் இன்னும் பல விஷயங்கள் இங்கு பார்த்தோம் மேலும் கடைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு இடம் என பொதுவான பண் கடை கட்டிடத்திற்கே உரித்தான அனைத்தும் இங்கும் இருந்தது .அடுத்ததாக நாங்கள் சென்றது ஒரு பூங்காவிற்கு கிரீக் பார்க்.  பூங்கா என்றவுடன் கொஞ்சம் புல்வெளி உட்கார அங்கங்கு சில நாற்காலிகள் என்ற மரபை மாற்றி பரந்து  விரிந்த புல்வெளி, நீர் நிலை தேக்கங்களின் கரையில் விளையாடி மகிழலாம், சிறுவர்/சிறுமியர் விளையாட பல வகயான அமைப்புகள். எனது அண்ணன் குழந்தைகளுடன் விளையாடி கலைத்து போனது மட்டுமல்ல நாங்களும் குழந்தைகளாகவே மாறி போனோம்.மேலும் கேபிள் கார் பயணம் இங்கு  சிறப்பான ஒன்று,    நாங்கள் சென்றிருந்த நேரம் பழுதடைந்து விட்டதாம் மற்றுமொரு முதல் அனுபவத்தை தவறவிட்ட வருந்தம் எனக்கு. அனால் நாங்கள் அங்கு சென்றதற்கு முக்கியமான காரணமே வேறு,அது மேலும் ஒரு புதிய அனுபவம் எனக்கு. அதுதான் சீல் மற்றும் டால்பின் காட்சியகம்.



மீன் வகைகளில் மிகவும் புத்திசாலி டால்பின் என்று எங்கோ  படித்ததை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். பயிற்சியாளர்கள் எழுப்பும் சிறு சப்தம் மற்றும் கை அசைவை  புரிந்துகொண்டு சீல் மற்றும் டால்பின் செய்யும் சாகசங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக டால்பின் அதிலும் மிக உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பந்தை எகிறி சுழன்று வாலால் (கால் பந்து விளையாட்டில் சொல்லப்படும் சிசர் கட் போல) அடித்தது மீண்டும் மீண்டும் கண் முன் வந்து செல்கிறது.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் துபாய் மாளிற்கு சென்றோம் (அடங்க மாட்டோம்ல..) அடுத்த சிறப்பு நிகழ்ச்சி எங்களுக்காக காத்திருந்தது fountain show. மாலை ஏழு மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடங்களுக்கு நிகழ்த்தப்படும் ஒரு இனிமையான காட்சி. ரம்மியமான இசைக்கேற்ப தண்ணீர் நடனம், மகுடிக்கு எழுந்தது   ஆடும்  பாம்பை  போன்று தண்ணீர் மேலே  எழுந்து வளைந்து நெளிந்து ஆடுவதும் அதற்கேற்றார் போல் விளக்குகள் மின்னுவதும் பார்க்க இரண்டு கண்கள்  போதவில்லை. இதே  நேரத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டமான புர்ஜ் அல் அராப் கட்டிடத்தில் இருந்து நட்சத்திரங்கள் விழுவது போன்று மின்விளக்குகளின்  விளையாட்டு வேறு. ஏற்கனவே நேரம் பத்து மணியை தாண்டி விட்டாலும் துபாயிலிருந்து அபுதாபி  வரை  திரும்பி  செல்ல வேண்டியிருதாலும் மேலும் அரை மணி காத்திருந்து  மீண்டும்  ஒருமுறை  அந்த தண்ணீர் நடனத்தை பார்த்துவிட்டுத்தான் சென்றோம்.
இப்படியாக ஒரு நாள் முழுவதும் புது புது அனுபவங்களுடன் மகிழ்ச்சியாக சென்ற மணித்துளிகளை முடித்த அளவு  பதிந்துவிட வேண்டும் என்ற ஆசைதான் இந்த பகிர்வு. மீண்டும் வேற ஒரு நல்ல ஊர்ல சந்திப்போம்.

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

can u please post, a room in which 10 bachelors share and share one toilet photos.

எம் அப்துல் காதர் said...

உங்களோடவே சேர்ந்து சுற்றி பார்த்த பிரமை!! பகிர்வுக்கு நன்றி!!

Unknown said...

செந்திலே சுப்பர். எங்கள மாறி பாக்காதவங்கல்லாம் தெரிஞ்சுக்கலாம்.நன்றி .
umasekhar

Post a Comment

Related Posts with Thumbnails