Thursday, November 4, 2010

புத்தாடை - தீபாவளி ஸ்பெஷல்

அதிகாலை உற்சாகமாய் வந்து சிறுவனை  எழுப்பினாள் அம்மா, கிழக்குமுகம் பார்த்து உட்கார சொல்லி தலைக்கு எண்ணை வைத்து, கையில் சீயக்காய் கிண்ணத்தை கொடுத்து குளித்துவிட்டு வர  சொன்னாள். உறங்கிக்கொண்டே மெதுவாய் தலையில் சீயக்காய் தடவிகொண்டிருந்தான் அந்த சிறுவன். அதை பார்த்து சிரித்த அவன்   தந்தை பாய்ந்து வந்து தலைமுடியை இருகபிடித்து எண்ணை போகும்வரை தேய்த்து இதமான சுடுநீரை ஊற்றி குளிப்பாட்டி விட்டார் . தலையில் ஈரம் காயும்  வரை துண்டால் துவட்டி விட்டு அந்த துண்டையே இடுப்பில் கட்டிவிட்டு செல்லமாக முதுகில்  தட்டி ஓடு என்றார்.



துண்டோடு ஓடி சென்று சாமி படங்களுக்கு முன்னே சென்று நின்றால்  புது துணி, பலகாரங்கள், பட்டாசுகள், இனிப்புகள், இவற்றோடு தலை வாழை  இலையில் இட்லி,வடை, சர்க்கரை பொங்கல் குறிப்பாக அவனுக்கு பிடித்த சுழியம்  அனைத்தும் தயாராக அவன்  தாயாருடன்  காத்துகொண்டிருந்தது. எப்பம்மா இதெல்லாம் செஞ்சிங்க என்று ஆச்சிரியமாய் கேட்ட   அந்த சிறுவனுக்கு   ஒரு புன்னகையை மட்டும் பதிலாக சொல்லிவிட்டு கையில் இருக்கும் கிண்ணத்தை அவனிடம் கொடுத்து அதில் இருக்கும் பச்சை நிற மருந்தை  குடிக்க சொன்னாள். அது வெற்றிலை, சீரகம், இஞ்சி  போன்ற சிலவற்றை அரைத்து செய்தது. பிடிக்காவிட்டாலும் புது துணி கையில் கிடைக்கும் வரை என்ன சொன்னாலும் கேட்பான் என்று அவன் தாய்க்கு நன்றாக தெரியும். மருந்தை குடித்துவிட்டு தனது  புதிய  துணிகளை எல்லா துணிகளுக்கும் மேலே வைத்து என்னுடையதுதான் முதலில் இருக்க வேண்டும் என்று தங்கையுடன் சண்டை போட்டுகொண்டிருந்தான். 



பூஜை தொடங்குகிறது, அப்போது ஒரு சரவெடியை சிறுவன் கையில் கொடுத்து வெளியில் சென்று வெடிக்க சொல்கிறார் அவன் தந்தை. பற்றவைக்க ஒரு கையில் ஊதுபத்தியும் மழை லேசாக பெய்துகொண்டிருந்ததால் மற்றொருகையில் குடையையும் பிடித்துக்கொண்டு ஈரமற்ற ஒரு இடத்தில வெடியை பற்றவைத்துவிட்டு வீட்டினுள் ஓடி செல்கிறான். பூஜைக்கான மணி சப்தமும் சரவெடி சப்தமும் இணைந்து ஒரு புது இசையாகவே அவன் காதில் ஒலிக்கிறது. தனது புதிய உடைகளை பார்த்துக்கொண்டே இருக்கை கூப்பி நின்றுகொண்டிருந்தான்.

  



எப்பம்மா பூஜை முடியும் என்று சிணுங்கலாக கேட்டவனிடம் முதலில் சாமியிடம் விழுந்து கும்பிட்டுவிட்டு அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வா என்றாள். ஒரு நொடியில் செய்துவிட்டு அப்பறம் என்றான், படைத்த இலையிலிருந்து சிறிது உணவை எடுத்து காக்காவுக்கு வைத்துவிட்டு வா என்றாள். பொறுமையை இழந்தவனாய் வெடுக்கென்று பிடுங்கி கொண்டு வேகமாக வெளியில் ஓடி கா கா என்று இரண்டு முறை கத்திவிட்டு அம்மா கொடுத்ததை வைத்து விட்டு வேகமாய் ஓடி வந்து துணிகளை எடுக்க சென்றான். அப்பா அம்மா காலில் விழுந்து எழுந்தான் நெற்றியில் விபூதி பூசி ஆசிர்வாதம் செய்தனர். புது துணிகளை அப்பாவிடமிருந்து பெற்றுகொண்டபோது அவன் மகிழ்ச்சி எல்லைகடந்துவிட்டது. பார்த்து  பார்த்து ஆசை ஆசையாய் வாங்கிய புத்தாடை, ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துக் கொண்டே இருந்த அந்த நிமிடம் பரவசமாய் தெரிந்தது அவனுக்கு.
புதிய ஆடை உடுத்தி ராஜநடை போட்டு   அம்மா எப்படி இருக்கிறது, அப்பா என் உடை எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டு பாராட்டுகளை பெற்றுக்கொண்டு ஆவலாக வெளியில் நண்பர்களை காண ஓட முற்பட்டவனை பிடித்து நிறுத்தினாள் அம்மா. சாப்பிட்டுவிட்டுத்தான் வெளியில் செல்ல வேண்டும் என்றாள். இனி அவனை யாராலும் தடுக்க முடியாது இருந்தாலும் தனக்கு பிடித்த சுழியத்தை இரண்டை வாயிலும் இரண்டை கையிலும் எடுத்து கொண்டு வேகமாக வாசலை தாண்டி எகிறி குதித்து ஓட.......... மழையில் பதமாக இளகி இருந்த களிமண்ணில் காலை வைக்க சறுக்கி கொண்டே சென்று சேற்றில் விழுந்தான். புத்தாடை ஒரு நிமிடத்தில் சேற்றாடை ஆனது.

தலையை தொங்க போட்டுக்கொண்டே விரக்தியாக வீட்டிற்குள் நுழைந்தவனிடம் தாய் சிரித்துகொண்டே சொன்னால் இதுக்குதான் இத்தனை நாளாய் தவியாய் தவித்துகொண்டிருந்தாயா? வழக்கம் போல் இந்த தீபாவளியும் பழைய துணியை போட்டுகொண்டு கொண்டாடு, நான் இதை இப்பதே துவைத்து காயபோடுகிறேன் என்று துணிகளை வாங்கி சென்றால். மாலை வரை வெளியே சென்று நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோர் வீட்டிற்கும் சென்று ஆடி பாடி வெடிகளை எல்லாம் வெடித்து தீர்த்துவிட்டு, ஒரு துளி சேறு கூட படாமல் வீட்டினுள் சென்று கொடியில் கிடந்த புது துணிகளை தொட்டு பார்த்தான். மழை காலம் என்பதால் வீட்டின் உள்ளேயே காய போட்டிருந்ததால் இன்னும் ஈரம் இருந்தது. நாளை பள்ளிக்கு புத்தாடை அணிந்து செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் துணிகளை பார்த்துக்கொண்டே படுத்து உறங்கிவிட்டான்.

எனது பள்ளி பருவத்தில் ஒவ்வொரு தீபாவளிக்கும் எங்கள் வீட்டில் நடந்த காட்சிகள்தான் மேலே சொன்ன கதை அதில் வரும் சிறுவன் நானேதான். தீபாவளி என்றவுடன் என்மனக்கண்ணில் தோன்றி மறையும் காட்சிகளைத்தான் இங்கு கதையாக பதிவு  செய்ய முயற்சித்துள்ளேன். இது போன்றொரு பாரம்பரியமான தீபாவளி கொண்டாடி பலவருடங்கள் ஆகிவிட்டது. உங்களுக்கும்தானே?

உங்கள் அனவருக்கும் பொடுசின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் வாயிலாகவோ அல்லது  ஓட்டு போட்டோ தெரிவிக்கவும் ப்ளீஸ்.

3 comments:

எம் அப்துல் காதர் said...

பதிவு அருமை!! சந்தோஷமா தீபாவளிய கொண்டாடுங்க பாஸ்!!

'பொடுஸ்' தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்

Unknown said...

உங்களுக்கும், உங்கள் கும்டும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். உங்கள் புதிய முயற்சி (வலைப்பதிவு) நன்றாக உள்ளது. மென்மேலும் வளர நல்வாழ்த்துகள்.

சிறப்பு வாழ்த்துக்களுடன்,
ஜவஹர்பாபு.

Unknown said...

Happy Diwali mapla

enaku oru unmai therinchaganum
Diwali andru sarkarai pongal panagala................

Post a Comment

Related Posts with Thumbnails