Showing posts with label ஊர் சுத்தலாம் வாங்க..... Show all posts
Showing posts with label ஊர் சுத்தலாம் வாங்க..... Show all posts

Monday, November 1, 2010

கடலுக்கு ஒரு மினியேட்சர் !!!

துபாய் விமான நிலையம்
ஒவ்வொரு பயணம் என்பதும் ஒரு புதிய புத்தகம் படிப்பது போன்றது. புதிய மனிதர்கள், இடங்கள், அனுபவங்கள், ஆச்சரியங்கள், திருப்பங்கள், எதிர்பார்ப்புகள், சுவாரஸ்யங்கள் என எல்லாம் நிறைந்திருக்கும். எதார்த்தத்தை விரும்பும் எனக்கு எப்போதும் எங்காவது ஊர் சுற்றுவது என்றால் உற்ச்சாகமாக கிளம்பிவிடுவேன். அப்படி இருந்தும் சென்ற ஒரு வாரத்தில் மட்டும் சற்று அதிகமாகவே ஊர் ஊராக சுற்றிய  சுற்றில் தலை சுற்றிவிட்டது (முதுகு தெரிஞ்சிதான்னு கேட்க கூடாது). கத்தார்லேர்ந்து ஆச்சாள்புரம் போயிட்டு வந்தேன் ஆனால் வழி எப்படின்னா...

RLIC டு  தோஹா டு  அபுதாபி டு  துபாய் டு  சென்னை டு  ஆச்சாள்புரம் டு  சென்னை டு  துபாய் டு  அபுதாபி டு  துபாய் டு  அபுதாபி டு  தோஹா டு  RLIC

சுருக்கமா சொன்னதுக்கே இவ்வளவு டு இன்னும் விளக்கமா சொன்னா எல்லாரும் தூங்கிடுவிங்கன்னு தெரியும் அதனால நேரா விஷயத்துக்கு போவோமா... இந்திய தொலைகாட்சி முதல் முறையாக என்பது போல் எனது வாழ்கை வரலாற்றில் முதல் முறையாக என்று சொல்லகூடிய விஷயங்கள் இம்முறை துபாயில் எனக்கு கிடைத்தது. அதற்கு காரணமான எனது அண்ணனுக்கு இந்த பதிவின்  வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
துபாய்

அபுதாபி
 இப்ப ஊர் சுத்த ரெடியா? அபுதாபியிலிருந்து காலை புறப்பட்டு முதலில் சென்றது உலகின் மிகபெரிய பண்கடை கட்டிடமான  "துபாய் மாள்". இது எங்கே இருக்கிறது என்றால் உலகின்  மிக  உயரமான  கட்டிடம்  என்ற பெருமைவாய்ந்த புர்ஜ் அல் அராப் கட்டிடத்திற்கு கீழே பார்வையாளர்களுக்கான  நுழைவாயிலாக அமைந்திருகிறது.  என்னை தவிர மற்றவர்கள் புர்ஜ் அல் அராப் கட்டிடத்திற்கு மேலே ஏற்கனவே சென்று வந்துவிட்டதால் அன்று நாங்கள்  சென்றது  துபாய் மாளில் உள்ள மீன் காட்சியகம் மற்றும் கடல் வாழ் உயிரியல் பூங்கா Dubai Aquarium and Under Water Zoo).

துபாய் மாள் மேற்கூரை
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த மீன் காட்சியகம் உலகின் மிகபெரிய (acrylic) அக்ரலிக் கண்ணாடி பலகையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. (32.88 மீ அகலம்  8.3 மீ உயரம்  750 மி.மீ தடிமன்). இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் இந்த தொட்டியை சுற்றி முழுவதுமாக பக்கவாட்டில் மட்டுமல்லாமல் உள்ளேயும் அதாவது குகை போன்ற அமைப்பில் தண்ணீருக்கு   அடியில் சென்று பார்ப்பது போலவும் தொட்டிக்கு மேலே சென்று பார்ப்பது போலவும் அமைந்திருப்பது கடலுக்குள் சென்று வந்த முழுமையான
அனுபவத்தை தந்தது. அந்த அனுபவத்தை முடிந்த அளவு புகைபடமாக கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்காக.



நடுவே காடு போன்ற அமைப்பில் ஒரு உணவகம்


பென்குயின்

இதுவும் ஒருவகை மீன்தான்

புகைபடங்களை பார்த்த பிறகு பதிவோட தலைப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

துபாய் மாளின் ஒரு பகுதிதான் இந்த மீன் காட்சியகம் இன்னும் பல விஷயங்கள் இங்கு பார்த்தோம் மேலும் கடைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு இடம் என பொதுவான பண் கடை கட்டிடத்திற்கே உரித்தான அனைத்தும் இங்கும் இருந்தது .அடுத்ததாக நாங்கள் சென்றது ஒரு பூங்காவிற்கு கிரீக் பார்க்.  பூங்கா என்றவுடன் கொஞ்சம் புல்வெளி உட்கார அங்கங்கு சில நாற்காலிகள் என்ற மரபை மாற்றி பரந்து  விரிந்த புல்வெளி, நீர் நிலை தேக்கங்களின் கரையில் விளையாடி மகிழலாம், சிறுவர்/சிறுமியர் விளையாட பல வகயான அமைப்புகள். எனது அண்ணன் குழந்தைகளுடன் விளையாடி கலைத்து போனது மட்டுமல்ல நாங்களும் குழந்தைகளாகவே மாறி போனோம்.மேலும் கேபிள் கார் பயணம் இங்கு  சிறப்பான ஒன்று,    நாங்கள் சென்றிருந்த நேரம் பழுதடைந்து விட்டதாம் மற்றுமொரு முதல் அனுபவத்தை தவறவிட்ட வருந்தம் எனக்கு. அனால் நாங்கள் அங்கு சென்றதற்கு முக்கியமான காரணமே வேறு,அது மேலும் ஒரு புதிய அனுபவம் எனக்கு. அதுதான் சீல் மற்றும் டால்பின் காட்சியகம்.



மீன் வகைகளில் மிகவும் புத்திசாலி டால்பின் என்று எங்கோ  படித்ததை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். பயிற்சியாளர்கள் எழுப்பும் சிறு சப்தம் மற்றும் கை அசைவை  புரிந்துகொண்டு சீல் மற்றும் டால்பின் செய்யும் சாகசங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக டால்பின் அதிலும் மிக உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பந்தை எகிறி சுழன்று வாலால் (கால் பந்து விளையாட்டில் சொல்லப்படும் சிசர் கட் போல) அடித்தது மீண்டும் மீண்டும் கண் முன் வந்து செல்கிறது.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் துபாய் மாளிற்கு சென்றோம் (அடங்க மாட்டோம்ல..) அடுத்த சிறப்பு நிகழ்ச்சி எங்களுக்காக காத்திருந்தது fountain show. மாலை ஏழு மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடங்களுக்கு நிகழ்த்தப்படும் ஒரு இனிமையான காட்சி. ரம்மியமான இசைக்கேற்ப தண்ணீர் நடனம், மகுடிக்கு எழுந்தது   ஆடும்  பாம்பை  போன்று தண்ணீர் மேலே  எழுந்து வளைந்து நெளிந்து ஆடுவதும் அதற்கேற்றார் போல் விளக்குகள் மின்னுவதும் பார்க்க இரண்டு கண்கள்  போதவில்லை. இதே  நேரத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டமான புர்ஜ் அல் அராப் கட்டிடத்தில் இருந்து நட்சத்திரங்கள் விழுவது போன்று மின்விளக்குகளின்  விளையாட்டு வேறு. ஏற்கனவே நேரம் பத்து மணியை தாண்டி விட்டாலும் துபாயிலிருந்து அபுதாபி  வரை  திரும்பி  செல்ல வேண்டியிருதாலும் மேலும் அரை மணி காத்திருந்து  மீண்டும்  ஒருமுறை  அந்த தண்ணீர் நடனத்தை பார்த்துவிட்டுத்தான் சென்றோம்.
இப்படியாக ஒரு நாள் முழுவதும் புது புது அனுபவங்களுடன் மகிழ்ச்சியாக சென்ற மணித்துளிகளை முடித்த அளவு  பதிந்துவிட வேண்டும் என்ற ஆசைதான் இந்த பகிர்வு. மீண்டும் வேற ஒரு நல்ல ஊர்ல சந்திப்போம்.

Saturday, October 2, 2010

கத்தார்-வில்லாஜ்ஜியோ

கடந்த இரண்டு (1) (2) பதிவுகளில் கத்தாரை பற்றி கொஞ்சம் அதிகமாகவே அலசிவிட்டேன் போல.. (ஏன் சாயம் போயிடுச்சா?) இருந்தாலும் விடுவதாய் இல்லை. 
அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில்  உள்ள பல பண்கடை கட்டிடங்களுக்கு (ஷாப்பிங் மால்)  சென்றிருக்கிறேன்....  பார்த்து வியந்தும் இருக்கிறேன். அனால் என்னை மிகவும் கவர்ந்த உண்மையில் ரசிக்கும் வகையில் கத்தாரில்  இருந்த ஒரு பண்கடை கட்டிடத்தை பற்றிதான் இந்த பதிவில் நான் எடுத்த சில புகைப்படங்களோடு என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்க உள்ள போலாமா..........
வில்லாஜ்ஜியோ - இதுதான் அந்த பண்கடை கட்டிடத்தின் பெயர். கட்டத்திற்கு வெளியே  காலை, மாலை, இரவு, பகல், வெயில், வியர்வை, காற்று என எந்த காலநிலை  வேண்டுமானலும்  இருக்கலாம்  ஆனால் உள்ளே வந்துவிட்டால் ஒரு இதமான குளிர், எப்போதும் மயக்கும் மாலை நேரம் போன்றதொரு ரம்மியமான வெளிச்சம். கட்டிடத்திற்கு உள்ளேதான் இருக்கிறோம்  என்ற  எண்ணம்  சிறிதும்  நமக்கு ஏற்படாதவாறு மேற்கூரையில்  வானம் போன்றே வர்ணம்  தீட்டப்பட்டிருப்பதே இந்த கட்டத்தின் மற்ற  விஷயங்கள்  சிறப்பாக  தெரிவதற்கு அடிப்படை  காரணமாக இருக்கும் என கருதுகிறேன். இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஐரோப்பிய மற்றும் இத்தாலிய கட்டிடக்கலையை   முன்மாதிரியாக கொண்டு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளில் உள்ள வீதிகளை போலவே மிகவும்  நேர்த்தியான  முறையில் அமைந்துள்ளது மேலும் அழகு.  
உள்ளே நுழையும் போதே புதிதாக ஒரு ஊருக்குள் செல்வது போன்று உணர்வும்  வீதிகளின் இருபுறமும் வீடுகள் இருப்பது போன்ற அமைப்பும் அனைவரையும் மேலே பார்த்துக்கொண்டே நடக்க வைக்கிறது.  (கிட்ட தட்ட பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல என்பார்களே அப்படிதான்)
வீதிகளின் நடுவே தார் சாலைகள் இருப்பது போல இங்கே அமைதியான  நீரோடை,  கட்டிடத்தின் அழகை  முழுமை அடைய  செய்கிறது  எனலாம். படகு சவாரி செய்து கொண்டே இந்த கட்டத்தின் அழகை ரசிக்க முடியும்.
உலகின் பிரபலமான தலைசிறந்த அனைத்து கடைகளும் இந்த ஒரே கட்டிடத்தில் பார்த்துவிடலாம் (நம்ம பட்ஜட்டுக்கு பார்க்க மட்டும்தாங்க முடியும்)
எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைக்கிறது என்பதை விட எல்லா நாட்டு மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து அவரவர் முறைப்படி உணவு உண்பதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சிதான். (நாங்க எப்பவுமே ஐஸ் கிரீம் மட்டும்தான்)
பனிக்கட்டி தளம் - சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) செய்யலாம் என்னை போல் தெரியாதவர்கள்  வேடிக்கை பார்க்கலாம்.   புதிதாக செல்வோருக்கு பயிற்சி    கொடுக்க பயிற்சியாளர்கள்  இருக்கின்றனர்.  
இரவு நேர வானத்தை வர்ணம் தீட்டியிருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஒவ்வொரு மைய பகுதியிலும் நாம் நின்று எவ்வளவு மெதுவாக பேசினாலும் அதன் எதிரொலி பலமுறை கேட்பது நம்மை பிரம்மிக்க செய்கிறது.


  • 13 திரைகள் உள்ளடக்கிய திரை அரங்கம்  3D வசதியுடன் கூடியது.  

  • 130000 சதுர மீட்டர் பரப்பளவில் 220 கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளன.

  • குழந்தைகளுக்காக  தனியாக பல விளையாட்டுக்களுடன் கூடிய பகுதி உள்ளது.
இப்படி வசதிகள் பல இருந்தாலும் இக்கட்டிடத்தின் உள்ளே நாம் எத்தனை முறை சென்றாலும் இதன் அழகு மற்ற விஷயங்களை கவனிக்க விடுவதில்லை என்பதே உண்மை.

இப்போ உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிதோ இல்லையோ கண்டிப்பா இந்த பண்கடை கட்டிடத்தை பிடிச்சிருக்கும்னு நினைக்கிறன். உங்கள் கருத்தை மறக்காம சொல்லிட்டு கீழே ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. மீண்டும்  இன்னொரு  இடத்தில பார்ப்போம். வர்ர்ர்ர்ர்ர்டா........ 

Saturday, September 25, 2010

கத்தார் - ஒரு அலசல்....2

கத்தார் - ஒரு அலசல்....1 -ல் கத்தாரை பற்றிய ஒரு அறிமுகமும், 1940களுக்கு    பிறகு கத்தாரின்   வளர்ச்சியும் அதற்கு  முக்கிய காரணமான இயற்கை வாயு மற்றும் எண்ணை வளத்தை பற்றியும் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முறைகளையும் மேலும் பணிநிமிர்தமாக   இங்கு வருவோர்கள் எதிர்கொள்ளும்  சவால்களை முடிந்த அளவு சுருக்கமாக பார்த்தோம். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் நானும், நம் நாட்டவரும், மற்ற நாடுகளை சேர்ந்த குறிப்பாக சொகுசானவர்கள் என நாம் கருதும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கே ஓடி வருவது ஏன்???????????
 













இதற்க்கு பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் முதல் முக்கியமான காரணம் வருமான வரி கிடையாது  என்பதே!!!! உலகிலேயே  வரி இல்லாத/குறைந்த நாடுகள் வரிசையில் கத்தார் முதலிடம் வகிக்கிறது. வரி அதிகம் வசூலிக்கும்  நாடுகளில் முதல் பத்து இடங்களை பார்த்தால் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமாக உள்ளது. இதனால்தான் இவர்கள் இங்கு பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதும் இங்கு படிப்பு, தகுதி, திறமை,  அனுபவம் இரண்டாம் பட்சம்தான். நேராக மேனேஜர்தான்! அது கிளீனிங் வேலையாயிருந்தாலும் சரி இவங்கதான் கிளீனிங் மேனேஜர். அப்படி ஒரு மதிப்பு இங்க. நம்ம ஆளுங்க முழு கால்சட்டை அணிந்து சென்றாலும் உள்ளே செல்லமுடியாத  சில இடங்களில் இவர்கள் அரை கால்சட்டை மற்றும் செருப்புடனே உள்ளே செல்லலாம். (நம்ம ஊர்லையே இந்த கொடுமையெல்லாம் இருக்கும்போது இது ஒன்னும் பெரிதல்ல!!!) இதில் கவனிக்க வேண்டிய  ஒரு முக்கிய செய்தி இவர்களில் பெரும்பாலனோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. அதாவது பிறப்பால் இல்லாமல்  வெறும் பாஸ்போர்டால் ஐரோப்பியர்கள் ஆனவர்கள். ஐரோப்பிய நாடுகளை  சுற்றி இருக்கும் மற்ற  நாடுகளில் இருப்பவர்கள்  இங்கே உள்ளே  சென்று (குறிப்பாக பிரான்ஸ் நாட்டை கூறலாம்) எப்படியாவது பாஸ்போர்ட் வாங்கி விடுவார்கள் அதற்கு பல வழிகள் கூறுகின்றனர். ஐரோப்பிய பாஸ்போர்ட் காரர்களுக்கு  என தனி சம்பள நிர்ணயம் செய்கிறார்கள் பிறகென்ன ராஜ வாழ்க்கைதான். கத்தாரில் வரி கிடையாது என்பது இவர்களுக்கோ    , மற்ற நாட்டவர்க்கோ பெரிய விஷயமாக  இருக்கலாம்  ஆனால் நமக்கு அதுவும் ஒரு சாதாரண விஷயம்தான்! ஏன்னா நாமதான் நம்  நாட்டிலேயும் வரி  கட்டுவதிலேயே! நம்மில் பலபேருக்கு இந்தியாவின் வரி சட்டங்களை பற்றி   தெரியாது . அப்படியே தெரிந்துகொள்ள ஆசைபட்டாலும் வரி கட்டாமல் எப்படி ஏமாத்தாலம் என்பதைத்தான் கற்றுக்கொள்ள்வோம். (ஸ்ஸ்ஸ்ஸ்.... உண்மை சுடுது) அதனால் நம்மவர்களுக்கு அதையும் தாண்டி  இருக்கும் சில காரணங்கள் இருக்க வேண்டும் அது என்ன?

தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக நம்மவர்கள் இங்கு வருவதற்கு காரணம் உலகறிந்ததே! குறைந்த பட்சம் ஏதாவது படித்துவிட்டு வருபவர்கள்  -மக்கள் தொகை, வேலையில்லா திண்டாட்டம், படிப்புக்கு தகுந்த வேலை. வேலைக்கு தகுந்த சம்பளம் இப்படி ஒரு பக்கம் இருக்கிறது. இந்த பிரிவில் வருபவர்கள் தப்பித்தார்கள். எதிர்பார்த்த வேலை, கைநிறைய சம்பளம் சொகுசான வாழ்கை என்று கூறமுடியாவிட்டாலும் ஓரளவிற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துவிடும். ஆனால் படிக்காமல் வறுமை, குடும்ப சூழல், அறியாமை போன்ற காரணங்களால் இங்கு வருபவர்களுக்கு இது பூலோக நரகம்தான். ஆனால் அப்படி வருவோர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம் குறிப்பாக இந்தியர்கள். இதற்கு இவர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என வட்டிக்கு பணம் வாங்கி ஏஜெண்டுகளிடம் கொடுத்து வருகிறார்கள்.  இருந்தும் சொற்ப சம்பளம்,  பல பேர்க்கு   சொன்ன வேலை/சம்பளம் கிடைக்காது. 12 முதல் 16 மணி நேரம்  வேலை. உணவு,தங்கும் இடம், போக்குவரத்து என ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சில இடங்களில் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் ஊருக்கு திரும்ப முடியும் என்பது வரை இவர்கள் படும் பாட்டை இது போல பத்து பதிவு போட்டாலும் பத்தாது.

"தோஹா" கத்தாரின் தலைநகரம் மட்டுமல்ல கத்தாரின் ஒரே நகரமும் கூட! இங்கு மட்டுமே பல அடுக்கு மாடி கட்டிடங்களை காணலாம் மற்றபடி இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில ஷாப்பிங் மால் இருக்கும். (ஷாப்பிங் மால்னா   தமிழ்ல பண் கடை கட்டிடமாம் ரொம்ப சிரமப்பட்டு கண்டுபுடிச்சேன்). உள்ளநாட்டு மக்களில் 80% க்கும் அதிகமானோர்  இங்குதான் வசிக்கின்றனர். வெறும் 132sq/km பரப்பளவில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இங்கேயே வசிக்கின்றனர் .   மிச்சமிருக்கும் 11,305sq/km பரப்பளவில் கிட்டதட்ட ஏழு லட்சம் மக்களும், கட்டுமான பணிகளுமே நிறைந்ததுதான் கத்தார்.
கத்தாரில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதியை பற்றி கட்டாயம் இங்கு சொல்லியாகவேண்டும். மூன்று  வார்த்தையில் சொல்லிடலாம்... மொக்கை!மொக்கை!! மொக்கை!!! ஆம்  தனக்கென வாகனம் இல்லாதவர்கள் வெளியில் செல்வதென்பது இயலாத ஒன்று. நகரத்திற்குள் ஓரளவு பரவாயில்லை ஆனால் மற்ற கிராமங்களில் இருப்பவர்கள்,  சைட்டில் இருப்பவர்கள் நிலைமை??? அவர்கள் பணி புரியும் கம்பெனி எப்பொழுது வண்டி அனுப்புகிறதோ தலைஎழுத்து  அப்போதுதான் வெளியே செல்லமுடியும், தேவையானவற்றை வாங்க முடியும்.
பொதுவாக அனைத்து கம்பெனிகளும் வார கடைசி (அதாவது இங்கு வியாழ கிழமை  மாலை தொடங்கி வெள்ளிகிழமை மாலை வரை) தோஹாவை நோக்கி பேருந்தை இயக்குவர், அவரவர் பணியாளர்களுக்கு மட்டும். ஆறு நாட்கள் அடைபட்டு கிடந்தவர்கள் திறந்துவிட்டால் அவ்வளவுதான் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தோஹாவிற்கு  திருவிழாகோலம் பூட்டி திக்குமுக்காட வைத்துவிட்டுத்தான் திரும்புவார்கள். அன்றைய நிலையில் பெட்டிகடைகளில் தண்ணீர் கிடைப்பதே கஷ்டம். இதுல சாப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். நான் வெளியில் தங்கி இருந்தவரை பல வெள்ளி இரவு பட்டினிதான்.  கத்தார் என்றவுடன் இங்கு வசித்த பலருக்கு (எனக்கும்) இந்த பிரச்சனைதான் முதலில் ஞாபகம் வரும் என்பதற்கு போன பதிவின் கமெண்ட்ஸ்  பகுதியில் ராஜ்குமார் அவர்களின் கமெண்ட்ஸ்  ஒரு உதாரணம்.
இப்படியொரு நிலைமை இருந்தாலும் 2022 உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது கத்தார். வாழ்த்துக்கள் ஆனால் ஒரே ஒரு சந்தேகம், உதாரணதிற்கு ஒரு பத்தாயிரம் பார்வையாளர்கள் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஒரு வாரத்திற்குள் வந்து குவிந்தார்கள் என்றால் அவர்களுக்கு தனித்தனியாக வாகனங்கள் ஏற்பாடு செயவார்களா? அல்லது அனைவரும் மைதானத்திலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதானா? போகட்டும் அதற்கு இன்னும் ஒரு மாமாங்கம் இருக்கிறது அதற்குள் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மனமிருந்தால் மார்கம் உண்டு என்பார்கள் இவர்களை பார்த்தால் பணம் இருந்தால் மார்கம் உண்டு என சொல்ல தோன்றுகிறது எனக்கு.

சில முக்கியமான விஷயங்கள்:
  • உலகத்தின் ஒரு சில மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.
  • 
    H .H .Hamad bin Khalifa Al Thani
  • டிசம்பர்-18-1878 முதல் இன்று வரை அல்-தானி என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-18 கத்தார் தினமாக (நேஷனல் டே) கொண்டாட படுகிறது.
  • இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கும் இவர்களின் தாய் மொழி அரபிக் ஆகும்.
  •  
  • எங்கு சென்றாலும் ஆண்களும் பெண்களும் தங்களது பாரம்பரிய உடை அணிந்து  செல்வது ஒரு சிறப்பாக  கூறலாம். (நாம எப்படி? எத்தனை  பேருக்கு  வேஷ்டி  ஒழுங்கா கட்ட தெரியும்?)
  • வாயு மற்றும் எண்ணை வளங்கள் கண்டுபிடிக்கும் முன்பு வரை மீன்பிடித்தல் மற்றும் முத்து எடுத்தல் (ரஜினி படம் இல்லைங்க) இவைதான் இவர்களின் பிரதான தொழில்.
















  • கிட்டத்தட்ட 1966 வரை இங்கு நம் இந்திய ரூபாய் நோட்டுகள்தான் (gulf rupees) புழக்கத்தில் இருந்திருக்கிறது.
  • தற்போது கத்தார்  ரியால்ஸ் நடைமுறையில் உள்ளது (1QR = INR  12 ~ 13 )





  • ஒட்டகம் மற்றும் குதிரை ரேஸ் இங்கு பழமையான மற்றும் பிரபலமான விளையாட்டும் கூட.
     



  • 2006 ம் ஆண்டு 15 ஆம் ஆசிய விளையாட்டு   போட்டிகள்  கத்தாரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக பல புதிய விளையாட்டு மைதானங்கள்   கட்டப்பட்டன.

    • 2011 ம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளது.


    கத்தார் ஒரு காலத்தில்......

     இது போன்ற இன்னும் பல கத்தாரின் புகைப்படங்களை காண இங்கே க்ளிக்கவும்

    கத்தாரை பற்றி நான் கேட்டு, படித்து, பார்த்து அறிந்துகொண்ட அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். மறக்காமல்  உங்கள்  கருத்துக்களை  என்னுடன் நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    அடுத்த பதிவும் கத்தார பத்திதாங்க! இங்கு இருக்கும் ஒரு முக்கியமான பண் கடை கட்டிடம்  அதாங்க ஷாப்பிங் மால் பற்றியது. உங்களுக்காக  நானே  எடுத்த  சில புகைப்படங்களுடன்......   





    Related Posts with Thumbnails