Tuesday, October 19, 2010

தானத்தில் சிறந்தது....

நேற்று மாலை தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றிக்கொண்டே சென்றபோது ஏதோ ஒரு ஹிந்தி சேனலில் சற்று தானாக விரல் ஓய்வெடுக்க நின்றபோது ஒரு விளம்பரம் பார்த்தேன். இந்த பதிவை எழுதும் போது உண்மையில் அந்த விளம்பரத்தை பார்த்து நான்கு மணி நேரங்களுக்கு மேலாகிவிட்டது  ஆனால் அந்த விளம்பரத்தை இதுவரை நானூறு முறைக்கும் மேலாக மனதில் ஓடவிட்டுருப்பேன். இப்படி ஒரு தாக்கத்தை ஏதோ ஒரு புரியாத உணர்வை இதுவரை நான் பார்த்த பலநூறு சினிமாக்களுள் ஒன்று கூட ஏற்படுத்தியதாக தோன்றவில்லை. ஒரு முறை பார்த்தவுடனே மனதில் பதியும் அந்த சின்ன குழந்தையின் முகம், வெறும் 48 வினாடிகளுக்குள் ஒரு மிகப்பெரிய விஷயத்தை அனைவராலும்  எளிதில் புரிந்துகொள்ள கூடிய வகையில் அமைந்த உரையாடல் ஒரு நிமிடம் யாரையும் உணர்ச்சிவசப்படுதிவிடும்.


A better way of saying "get well soon"
Donate BLOOD
இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான இந்த விளம்பரத்தை எடுத்த இயக்குனர் மற்றும் குழுவினர்க்கு எத்துனை வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும். வாழ்த்துக்கள்.....

இதோ அந்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு. ஹிந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் சப்-டைட்டிலை பொறுமையாக படித்துக்கொள்ளவும்.

நன்றி youtube
நேரடியாக youtube ல் பார்க்க இங்கே கிளிக்கவும்

நானும் இரண்டு மூன்று முறை இரத்தம் கொடுத்திருக்கிறேன், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு எனது தாயாரின் இருதய அறுவைசிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மஞ்சள் காமாலை வந்திருந்ததால் இனி என் இரத்தத்தை யாருக்கும் பயன்படுத்த முடியாது என்று மருத்துவமனையில் அதிர்ச்சி செய்தி சொன்னார்கள். பிறகு எனது நண்பனின் ஏரியா கிரிகெட் டீமையே அழைத்து வந்து இரத்தம் கொடுத்து உதவினான்.  அவர்கள் அனைவர்க்கும்  இந்த பதிவை காணிக்கையாக்குகிறேன்.

இந்த பதிவால் யாரேனும் ஒருவர் இரத்த தானம் செய்தாரேயானால் அது எனது வாழ்நாள் சாதனையாகவே கருதுவேன்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் இனி வாழ் நாளில் இரதம் கொடுக்கவே முடியாதா??? விஷயம் தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்க.... 

Saturday, October 16, 2010

யார் அவள்?

சமீப காலமாக எனது உறவினர்களுடனோ,நண்பர்களுடனோ எப்போது பேசினாலும் அவர்கள் எனக்கு பெண் பார்ப்பதை பற்றி அல்லது திருமணத்தை பற்றி பேசி என்னை ஒரு குழப்பமான நிலையில் விட்டுவிடுகிறார்கள்.
அப்போதெல்லாம் "பொண்ண நீ பாக்குறது இருக்கட்டும், பொண்ணு ஒன்ன பாத்துடபோது" என்ற கவுண்டமணி செந்திலிடம் கூறும் வசனம் நினைவில் வந்து போகும்.
கண்ணில் காட்சிகள் தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடுமோ? என்ற பயத்தில் புலம்பிய சில புலம்பல்கள்......

கண்ணெதிரே கண்டதும் இல்லை...
கனவிலும் வந்ததில்லை...
ஆனால் - என்
கவிதைகளில் மட்டும் வாழ்கிறாள்!
யார் அவள்? 
அவள் இல்லாமல்
என் கவிதைகளுக்கு அர்த்தம் இல்லை!
அவளை பற்றி
நான் சொல்லாதது கவிதைகளே இல்லை!
யார் அவள்? கவிதை எழுத
உன்னை பற்றி சிந்திக்க வேண்டும்...
காதல் வர
உன்னை முதலில் சந்திக்க வேண்டும்...
சந்திக்கவும், சிந்திக்கவும் காத்திருக்கிறேன்!  
யார் அவள்?


என் கவிதைகள் போலவே
என் தோட்டத்து மொட்டுகளும்
காத்திருக்கின்றன...
அவள் கூந்தலில் மலர்வதற்காக!
யார் அவள்? 

Saturday, October 2, 2010

கத்தார்-வில்லாஜ்ஜியோ

கடந்த இரண்டு (1) (2) பதிவுகளில் கத்தாரை பற்றி கொஞ்சம் அதிகமாகவே அலசிவிட்டேன் போல.. (ஏன் சாயம் போயிடுச்சா?) இருந்தாலும் விடுவதாய் இல்லை. 
அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில்  உள்ள பல பண்கடை கட்டிடங்களுக்கு (ஷாப்பிங் மால்)  சென்றிருக்கிறேன்....  பார்த்து வியந்தும் இருக்கிறேன். அனால் என்னை மிகவும் கவர்ந்த உண்மையில் ரசிக்கும் வகையில் கத்தாரில்  இருந்த ஒரு பண்கடை கட்டிடத்தை பற்றிதான் இந்த பதிவில் நான் எடுத்த சில புகைப்படங்களோடு என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்க உள்ள போலாமா..........
வில்லாஜ்ஜியோ - இதுதான் அந்த பண்கடை கட்டிடத்தின் பெயர். கட்டத்திற்கு வெளியே  காலை, மாலை, இரவு, பகல், வெயில், வியர்வை, காற்று என எந்த காலநிலை  வேண்டுமானலும்  இருக்கலாம்  ஆனால் உள்ளே வந்துவிட்டால் ஒரு இதமான குளிர், எப்போதும் மயக்கும் மாலை நேரம் போன்றதொரு ரம்மியமான வெளிச்சம். கட்டிடத்திற்கு உள்ளேதான் இருக்கிறோம்  என்ற  எண்ணம்  சிறிதும்  நமக்கு ஏற்படாதவாறு மேற்கூரையில்  வானம் போன்றே வர்ணம்  தீட்டப்பட்டிருப்பதே இந்த கட்டத்தின் மற்ற  விஷயங்கள்  சிறப்பாக  தெரிவதற்கு அடிப்படை  காரணமாக இருக்கும் என கருதுகிறேன். இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஐரோப்பிய மற்றும் இத்தாலிய கட்டிடக்கலையை   முன்மாதிரியாக கொண்டு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்நாடுகளில் உள்ள வீதிகளை போலவே மிகவும்  நேர்த்தியான  முறையில் அமைந்துள்ளது மேலும் அழகு.  
உள்ளே நுழையும் போதே புதிதாக ஒரு ஊருக்குள் செல்வது போன்று உணர்வும்  வீதிகளின் இருபுறமும் வீடுகள் இருப்பது போன்ற அமைப்பும் அனைவரையும் மேலே பார்த்துக்கொண்டே நடக்க வைக்கிறது.  (கிட்ட தட்ட பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல என்பார்களே அப்படிதான்)
வீதிகளின் நடுவே தார் சாலைகள் இருப்பது போல இங்கே அமைதியான  நீரோடை,  கட்டிடத்தின் அழகை  முழுமை அடைய  செய்கிறது  எனலாம். படகு சவாரி செய்து கொண்டே இந்த கட்டத்தின் அழகை ரசிக்க முடியும்.
உலகின் பிரபலமான தலைசிறந்த அனைத்து கடைகளும் இந்த ஒரே கட்டிடத்தில் பார்த்துவிடலாம் (நம்ம பட்ஜட்டுக்கு பார்க்க மட்டும்தாங்க முடியும்)
எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைக்கிறது என்பதை விட எல்லா நாட்டு மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து அவரவர் முறைப்படி உணவு உண்பதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சிதான். (நாங்க எப்பவுமே ஐஸ் கிரீம் மட்டும்தான்)
பனிக்கட்டி தளம் - சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) செய்யலாம் என்னை போல் தெரியாதவர்கள்  வேடிக்கை பார்க்கலாம்.   புதிதாக செல்வோருக்கு பயிற்சி    கொடுக்க பயிற்சியாளர்கள்  இருக்கின்றனர்.  
இரவு நேர வானத்தை வர்ணம் தீட்டியிருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஒவ்வொரு மைய பகுதியிலும் நாம் நின்று எவ்வளவு மெதுவாக பேசினாலும் அதன் எதிரொலி பலமுறை கேட்பது நம்மை பிரம்மிக்க செய்கிறது.


  • 13 திரைகள் உள்ளடக்கிய திரை அரங்கம்  3D வசதியுடன் கூடியது.  

  • 130000 சதுர மீட்டர் பரப்பளவில் 220 கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளன.

  • குழந்தைகளுக்காக  தனியாக பல விளையாட்டுக்களுடன் கூடிய பகுதி உள்ளது.
இப்படி வசதிகள் பல இருந்தாலும் இக்கட்டிடத்தின் உள்ளே நாம் எத்தனை முறை சென்றாலும் இதன் அழகு மற்ற விஷயங்களை கவனிக்க விடுவதில்லை என்பதே உண்மை.

இப்போ உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிதோ இல்லையோ கண்டிப்பா இந்த பண்கடை கட்டிடத்தை பிடிச்சிருக்கும்னு நினைக்கிறன். உங்கள் கருத்தை மறக்காம சொல்லிட்டு கீழே ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. மீண்டும்  இன்னொரு  இடத்தில பார்ப்போம். வர்ர்ர்ர்ர்ர்டா........ 
Related Posts with Thumbnails