Monday, August 30, 2010

நான் எங்கிருக்கிறேன்...!!!! - பாகம்-2



அடிக்கடி கேட்கும் இந்த பாடலை என்னால் இன்னமும் கண்டுபிடிக்க முடியாதால் ஒருவேளை எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா வந்து விட்டதோ என்று ஆராயாமல் உடனடியாக  Dr.பொட்ஸ்ன்  ஆராய்ச்சி மையத்திற்கு செல்லுங்கள் ..... 

திட்டமிட்டபடி பயணத்தை தொடங்கும் நாள்.... பல்லாயிரகணக்கான மக்கள் "மனித இனத்தை காப்பாற்றுங்கள்" போன்ற வாசகங்கள் நிறைந்த பலகைகளுடனும் கோஷங்களுடனும்  Dr.பொட்ஸ்ன் ஆராய்ச்சி மையத்தை சுற்றி கூடி ஆரவரமிட்டபடி தங்களையும் தங்கள் வம்சத்தினரையும் ஏன் மனித இனத்தையே காப்பாற்ற வழிவகுக்கும் இந்த பயணத்திற்கு குழுவினரை வழியனுப்ப ஆவலோடு காத்திருகின்றனர். Dr.பொட்ஸ் தனது குழுவினருடன் புறபடுவதர்க்கு தயாராகி கொண்டிருக்கையில்  ஏதோதோ எண்ணங்கள் அவர்களை  சிறிது கலக்கமடைய செய்கிறது பயணத்தின் அபாயங்கள் மற்றும் அதற்கான பாதுகாப்பு? கால அவகாசம் இல்லாமையால் இது வரை எந்த சோதனை பயணமும்  செய்து பார்க்காத ஸ்பேஸ் க்ருசியர் ++?? பயணம் எத்தனை மாதங்கள் ஏன் ஆண்டுகள் வேண்டுமானாலும் தொடரலாம் அதுவரை மக்களின்  நிலைமை??? தனது கட்டுபாட்டு தளத்தினுடனான அல்லது பூமியுடன் தொடர்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால்???? இவ்வாறு பல கேள்விகள்.... எல்லாவற்றிற்கும் நம்பிக்கை என்ற ஒரே பதிலுடன் பயணத்திற்கான  கவுன்ட்டவுன் தொடங்குகிறது.   ...............6..5..4..3..2..1..0 இதோ விண்ணை நோக்கி சீறிக்கொண்டு புறப்டுகிறது  ஸ்பேஸ் க்ருசியர் ++ . புறப்பட்ட சில நொடிகளிலேயே பார்பவர்களின் கண்களை விட்டு மறைந்தது மட்டுமல்ல  இந்த பூமியை விட்டே வெளியேறியது.


சற்றே அதிக புகையுடனும் சப்தத்துடனும் கிளம்பியதில் மீண்டும் ஒலித்த அதே பாடல் கேட்கவில்லை நான் அதில் கவனம் கொள்ளவும் இல்லை.  மக்கள்  ஆரவாரமிட்டபடி  மகிழ்ச்சி  கடலில்  மூழ்கினர்  இதை  பார்த்து கொண்டிருக்கும் எனக்கு அந்த பாடல் ஒரு  பொருட்டாக தெரியவில்லை?   

 இனி விண்வெளியில்...




ஒவ்வொரு நாட்டிற்குமான தனிதனி விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட  இந்தியாவிற்கான பிரத்தியோகமான விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தகவல் தொடர்பு கருவிகள் மட்டுமே இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்பதாலும், ஒருங்கிணைந்த உலக ஆராய்ச்சி மையத்தின் தலைமை கட்டுப்பாட்டு தளம் என்பதாலும் சில ஆண்டுகளாக இதில் ஆராயப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த பயணம் தொடர்கிறது. இந்த ஸ்பேஸ் க்ருசியர் ++ ன் சூப்பர் பவர் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அவற்றுள் ஒன்று பயணிக்கும் போதே கடந்து  செல்லும்  கிரகங்களை  படம்  பிடித்து  உடனுக்குடன் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பிவிடும், இவ்வாறாக  அனுப்பப்படும்  புகைப்படங்கள் மூலமாகவும்   ஸ்பேஸ் க்ருசியர் ++ல் இருந்து அனுப்பப்படும்  பல்வேறு  சிக்னல்களின்  உதவியுடனும்  அந்தந்த கிரகங்களின் தன்மை, மனிதன் வாழ்வதற்கான சாத்தியகூறுகள், இயற்கை வளங்கள் என தேவையான அனைத்து விபரங்களையும் எளிதில் பட்டியல் இட்டுவிடலாம். இவ்வாறாக பல்வேறு ஆராய்ச்சி, தேடல்கள் மற்றும்  எதிர்பாராத ஆச்சிரியங்கள்,  அதிசயங்கள் என பயணம்  தொடர்ந்துகொண்டிருக்கிறது...!!! 


அவ்வப்போது  சரியான  இடைவெளியில்  அதே  பாடல்  என்  கவனத்தை  மீண்டும்  மீண்டும் திசை திருப்பினாலும் என் சிந்தனை இந்த பயணத்தை பற்றியே இருந்தது....


பயணத்தில்  சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள்.....


வழக்கம் போல்  Dr.பொட்ஸ் மற்றும் குழுவினர் கிடைக்கும்  ஒவ்வொரு சிறு தகவலையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும், பூமியில் உள்ள தங்களது ஆராய்ச்சி மையத்திற்கும்  தொடர்ந்து பகிர்ந்துகொண்டிருன்தனர். திருப்திகரமான  எந்த ஒரு தீர்வும்  இதுவரை கிடைக்காத நிலைமை, தகவல்  தொடர்பு  எல்லைக்கு வெளியே இன்னும் சில நொடிகளில் சென்றுவிடுவோம் என்பதை நன்கு அறிந்தாலும் பயணத்தை நிறுத்துவதாய் இல்லை. ஒருசில முக்கிய தகவல்களை ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பிவிட்டு தொடர்பு எல்லையை விட்டு வெளியேறியது ஸ்பேஸ் க்ருசியர் ++. மனித இனத்தை  அழிவிலிருந்து  காப்பாற்ற  சரியான  தீர்வு கிடைக்காமல் திரும்பபோவதில்லை என்ற மன உறுதியுடன்   Dr.பொட்ஸ் மற்றும் குழுவினர் தொடர்பு எல்லையை விட்டு  வெளியேற  ஆராய்ச்சி   மையகளில் ஒரே சலசலப்பு,  இச்செய்தி  எப்படியோ  மக்களிடம் பரவிவிட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்,  நானும்தான்...  காரணம்  இப்படி  ஒரு பயணத்திட்டம்  இருப்பதாக இதுவரை யாரிடமும் Dr.பொட்ஸ் தெரிவிக்கவில்லை. Dr.பொட்ஸ்  எங்கு சென்றார்?,  திரும்பி வருவரா?? எப்போது வருவார்??? அதுவரை  மக்களின்  நிலைமை????

என்ன கொடுமை சார் இது? இப்படி பல கவலைகளில்  இருக்கும்போது அதே ஆங்கில பாட்டு கேட்குது,   தேவைதானா? விடுங்க அத பத்தி அப்பறம் பார்காலம்...  


ஸ்பேஸ் க்ருசியர் ++ ஆராய்ச்சி மையங்களுக்கான தொடர்பு எல்லையை விட்டு வெளியேறியதே  தவிர நமது தொடர்பு எல்லையை விட்டு இன்னமும் வெளியரவில்லை வாருங்கள் தொடர்ந்து சென்று பார்ப்போம். பாகம் 3ல்.


அதுவரை தோன்றும் உங்கள் யுகங்களை பின்னூட்டத்தில் பதியவும்.

Sunday, August 22, 2010

நான் எங்கிருக்கிறேன்...!!!! - பாகம்-1


தூரத்தில் ஒரு பாடல் கேட்கிறது, எதோ ஒரு ஆங்கில பாடலாக இருக்கலாம் சரியாக காதில் விழவில்லை ஆனால் இது எனக்கு மிகவும் பரிட்சயமான இசை ...................,       சுமார் எத்தனை நூற்றாண்டுகள் கடந்துசென்றிருக்கலாம் என்று நினைவில்லை நான்காம் உலகப்போர் முடிந்து பல நூறு  ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பயன்படுத்தப்பட்ட  அணு ஆயுதங்களின்  தாக்கத்தால் இன்னமும் உயிர்  பலிகளின் எண்ணிக்கை  ஒருபுறம் தொடர்ந்து   அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, நவீனத்துவத்தின் பயனாக ஓசோன் படலத்தை ஓய்வெடுக்க செய்தாகிவிட்டது,  புவி வெப்பமயமாதலின் தாக்கம் அண்டார்டிக் பகுதியில் உள்ள பனிக்கட்டிகளை மட்டுமல்ல குளிர்சாதன பெட்டிகளில் உள்ள ஐஸ் கட்டிகளையும் முற்றிலுமாக உருக செய்துவிட்டது, மேலும் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு   என தொடர்ச்சியாக இயற்கை சீற்றங்கள் பூமியை புரட்டிபோட்டுகொண்டிருந்தது.   சுத்தமான காற்று, நிலம், நீர் என்று மனித இனத்தின் அனைத்து வாழ்வாதாரங்களும் குறைந்துவிட்டது. மேலும் தினம் தினம்  புதியதாய் உண்டாகும் கொடிய நோய்களினால் கூட்டம் கூட்டமாக மக்கள் மரணத்தை வரவேற்க தயாராகிவிட்டனர்.சொற்ப எண்ணிக்கையில் எஞ்சி இருக்கும் மனித இனத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உலக  நாடுகள் ஒன்று   பட்டு  பல வழிகளை ஆலோசிதுக்கொண்டிருந்த  தருணம்....                                     மீண்டும் தூரத்தில் அதே ஆங்கில பாடல் இம்முறையும் என் காதில் சரியாக விழவில்லை!!!!!!!!! போகட்டும்.................
அழிவின் எல்லையில் இருக்கும் சிலகோடி மக்களையாவது காபற்றிவிடவேண்டும் என்ற ஆதங்கத்துடன் உலக நாடுகளின் தலைவர்களும், விஞ்ஞானிகள், அறிஞர்கள், மத பெரியோர்கள் என பலரும் தங்களின் எண்ணங்களை வெளிபடுத்துகின்றனர். புதன், செவ்வாய், வியாழன் என இத்துனை நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்க பட்ட அனைத்து கிரகங்களுக்கும் செல்வதற்கான சாதக பாதகங்களை விவாதிடுகின்றனர். ஏற்கனவே பல கிரகங்களிலும் சென்று குடியேறிய மக்கள் முடிந்தவரை  அந்த கிரகங்களிலும் சுற்றுப்புழ சூழலை பூமியை விட மோசமான  நிலைமைக்கு மாற்றி விட்டு பூமியை நோக்கி  திரும்பிகொண்டிருக்கும்  இந்த  காலகட்டத்தில்  மீண்டும் அதே கிரகங்களுக்கு செல்வது என்பது நிரந்தர தீர்வாக இருக்காது  என்பதால்  கையில் இருக்கும் கடைசி வாய்ப்பும் நழுவி விட்டதே என அனைவரது முகத்திலும் ஒரு பயம் கலந்த சோகம் தெரியும் போது.........    என் காதில் மீண்டும் அதே பாடல் அதே இசை கேட்கிறது, ஏற்கனவே பலமுறை கேட்டது போல் இருக்கிறதே!!!!!!!!!!!அதை விடுங்கள்.................

தொடர்ந்து பல நாட்களாக இடைவேளை இன்றி நடைபெற்ற ஆலோசனை கூடத்தின் ஒரு நாள் பலநாடுகளை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள்  குழு சற்றே உற்சாகத்துடன்  பேச ஆரம்பிகிறது. மிக அதிக பொருட்செலவில் பல விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து  உருவாக்கிய ஒரு இயந்திரத்தை பற்றியது. இயந்திரம் என்பதை விட அது ஒரு அதிசய வாகனம் என்பதே சரி. அக்குழுவின் தலைவர் இந்த விவாதத்தில் பங்கேற்றிருக்கும் பல  இந்தியர்களுல் ஒரே தமிழன்  Dr.சர். பொட்ஸ்  (பல டாக்டர் பட்டங்கள்  பல நாடுகளின் உயரிய விருதுகள்,  பல ஆண்டுகள் தனது கண்டுபிடிபுகளுக்காக தொடர்ச்சியாக நோபல் பரிசை வாங்கிக்கொண்டே இருப்பவர் உங்கள் அனவருக்கும் தெரிந்த சாட்ச்சாத் நம்ம "பொடுசு" தாங்க)
தங்களது புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் க்ரூசியர் ++ ஐ பற்றி விவரிக்கலானார்.
நேனோ,  நானோ, நோநோ, ஏனோ, தானோ  என பல டெக்னாலஜிகலை பயன்படுத்தி உருவாக்கிய இந்த வாகனமானது ஒளியின்  வேகத்தை அசாதாரணமாக  ஓவர் டேக் செய்துவிடும்  எந்த கிரகத்திற்கும் சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ எளிதில்  சென்று வந்து விடலாம் முக்கியமாக காற்று, நீர், நெருப்பு, வெப்பம் என எந்த ஊடகதிளிருந்தும் தேவையான எரிபொருளை தானே பிரித்து எடுத்துக்கொள்ளும்  என்பதால் ஆண்டுகணக்கில் கூட இதில் பயணம் மேற்கொள்ளல்லாம் என்பதே இதன் சிறப்பு என்று  கூறி  முடிப்பதற்குல்  சுற்றிருப்பவர்கள்  வியப்பில்  கைதட்டி ஆரவரமிட ஆரம்பித்தனர்... இப்போதும் அந்த ஆங்கில பாடல் பின்னனியில் ஒலிப்பது கேட்கிறது, ஒலித்துகொண்டே இருக்கிறது ஏன் எனக்கு மட்டும் இந்த பாடல் ஒரு சரியான இடைவேலையில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று யோசிப்பதற்குல்.............   Dr.பொட்ஸ் பேச்சை தொடர்கிறார்....  
ஸ்பேஸ் க்ரூசியர் ++

ஸ்பேஸ் க்ரூசியர் ++ல் தனது குழுவினருடன் விண்வெளியில் பல சூரிய குடும்பங்களுக்கு  அப்பால் இதுவரை யாரும் முயற்சி செய்திடாத ஒரு கிரகத்தை சென்று ஆராயபோவதாகவும் அதில் மனித இனம் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும்  இந்த  ஆராய்ச்சிகாகவே தங்கள் வாகனம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்க,   மேலும் இந்த பயணத்தை  குறித்தும் ஆராய்ச்சி  பற்றியும்  இருந்த அனைவரது சந்தேகத்தையும் Dr.பொட்ஸ் பொறுமையாக தீர்த்துவைத்து தனது  பயண  திட்டத்தை  முழுமையாக விளக்கியவுடன்  அனைவரது முகத்திலும் சற்று நிம்மதி புன்னகை மலர்கிறது,  நம்பிக்கை பெருமூச்சி அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்க செய்ய........................... ஒலிக்கிறது  அதே ஆங்கில பாடல் இம்முறை சற்று அருகில் இன்னும் ஒரு முறை கேட்டால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவேன் அது என்ன பாடல் எங்கிருந்து ஒலிக்கிறது என்பதை........!!!!!

Dr.பொட்ஸ் பயணத்தை தொடர்ந்தாரா?  மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றினாரா? ஏன் இடைஇடையே தொடர்ந்து எனக்கு மட்டும் ஒரு  பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது அது என்ன பாடல்? 

போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும் பாகம் - 2ல் 

அதுவரை தோன்றும் உங்கல் யுகங்களை பின்னூட்டத்தில் பதியவும். 

Sunday, August 15, 2010

சுதந்திர தின கொண்டாட்டம்



எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இன்று எதாவது ஒரு பதிவு சுதந்திர  தினத்திற்காக எழுதிவிடவேண்டும் என்று ஆரம்பித்தேன் வெகுநேரமாக  யோசித்தும் என்ன எழுதுவது என்றுதெரியவில்லை  கண்மூடி  மனதை வெற்றிடமாக்கி மீண்டும் மீண்டும் யோசித்ததில்  ஒவ்வொரு  பருவத்திலும் எப்படி சுதந்திர தினத்தை  கொண்டாடினோம், மேலும்  ஒருசில  சுதந்திர போராட்ட   தியாகிகளின்  பெயர்கள்  மட்டுமே  மட்டுமே  நினைவிற்கு  வருகிறது  வேறு எதுவும் உணர்ச்சிபூர்வமாக  தோன்றவில்லை  என்றாலும்  பழைய  நினைவுகள்  நம்  உணர்சிகளை  கண்டிப்பாக  தட்டி  எழுப்பும்  என்ற நம்பிக்கையுடன்  தொடர்கிறேன். 

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் போது (ஒன்று முதல் நான்காம்  வகுப்பு வரை) அதிகாலையில் பள்ளிக்கு  சென்றால் பள்ளி வாயிலில்தோரணங்கள்,  கோலங்கள்,  ஒலிபெருக்கியில்  தேசபக்தி  பாடல்கள் என்று ஒரு பரவச  நிலையில்  ஆடிக்கொண்டே   உள்ளே சென்றால்  தலைமை ஆசிரியரோ  அல்லது  ஊர்  பெரியவர்கள்  யாராவது ஒருவர் தேசிய கொடியை ஏற்றுவார் அதிலிருந்து பூ விழுவதை அதிசயமாக பார்த்து கைதட்டிவிட்டு வரிசையில் சென்றால் ஒரு பைசா மிட்டாய் (ஒரு பைசா நடைமுறையில் இல்லை என்றாலும் ஐந்து பைசாவிற்கு ஐந்து மிட்டாய் என்பதால்) ஆரஞ்சு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களில் கைநிறைய அள்ளி கொடுப்பார்கள். ஐந்து அல்லது ஆறு மிட்டாயில் கை  நிறைந்து  விடும்  உண்மையில்  மனதும்தான். பிறகு  நண்பரகளுடன்  சிறிது  நேரம்  வியாயாடிவிட்டு வீட்டிற்கு  சென்றுவிடலாம்.

நடுநிலை பள்ளிகள்  (ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை) அதே  அதிகாலை தோரணங்கள், கோலங்கள், ஒலிபெருக்கியில் தேசபக்தி பாடல்கள்  என்பதெல்லாம்  மாறிவிட்டது  கொடி ஏற்றிவிட்டு ஐந்து பைசா மிட்டாய் (அதே மிட்டாய்தான் விலை ஏறிவிட்டது )  கைநிறைய  கொடுப்பார்கள் ஆனால் பத்தாது!!!. பிறகு சுதந்திர போராட்டத்தை பற்றியோ அல்லது போராடியவர்களை  பற்றியோ யாராவது பேசுவார்கள் அல்லது பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவை  நடைபெறும்  நானும்  இவற்றில்  பங்கேற்பதுண்டு  யாராவது  ஆசிரியர் எழுதி  கொடுத்ததை  மனப்பாடம்  செய்து  ஆவேசமாக  செய்கையுடன்  கையை நீட்டி பேசி  பரிசுகளும்  வாங்கியதுண்டு.  உண்மையில்  இப்போது  எந்த  தேசத்தலைவரின்  வாழ்கை  வரலாற்றை  பற்றியும்  ஞாபகம்  இல்லை  என்று  எண்ணி மிகவும் வருத்தமடைகிறேன்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தேசிய மாணவர் படை (NCC) இல் இருபதால் சற்றே நெஞ்சை நிமிர்த்தி வரிசையை ஒழுங்குபடுத்துவது,  சிறப்பு அணிவகுப்புகளில் கொடிக்கு வீர வணக்கம் செலுத்துவது, சாக்லேட் வழங்குவது  (இப்போதெல்லாம் மிட்டாய் போய்விட்டது)என்று  பொறுப்புகளுடன்  சென்றது. 

பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகள்  தொலைகாட்சி பெட்டி எங்கள் வீடிற்கு வந்த புதிது தூர்தர்சனில் ஒளிபரப்பாகும்  இந்திய  இராணுவத்தினரின்  அணிவகுப்பு மெய்சிளிர்க்கும் வண்ணம்  பார்த்து  ரசிப்பதோடு  முடிந்துவிடும்  (வேறு சேனல்கள் அப்போது எங்கள் ஊரில் கிடையாது)  பள்ளிக்கூடம் போகலையான்னு கேட்டுடாதீங்க இப்பெல்லாம் பள்ளி நாட்களிலேயே அப்பப்ப எட்டி பார்துட்டு சினிமாவுக்கோ அல்லது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கோ சென்றுவிடுவது வழக்கம்.

பாலிடெக்னிக் படிக்கும்போது சுதந்திர தினம் என்றால் ஒரு விடுமுறை அவ்வளவுதான். வேலைக்கு வந்த பிறகு ஆபிசில்   பார்வேர்ட்  இ-மெயில்  மட்டும்  இப்போது முதல் முறையாக ப்ளாக் வழியாக உங்களுடன்.   

நான் எழுதிருக்கும் ஒவ்வொரு பத்தியின் அளவையும் பார்த்தாலே எந்த அளவிற்கு சுதந்திர தின கொண்டாட்டங்கள் என்னளவில் குறைந்துவிட்டது என்பதை உணர்வீர்கள்.  இது எனக்கு மட்டும்தான் பொருந்துமா? எனது நாட்டுப்பற்று  இதைவைத்து  குறைந்துவிட்டது என்பதா? உண்மையில் உங்கள் மனசாட்சியை தொட்டு யோசித்து சொல்லுங்கள் சுதந்திர தினம்   என்றதும் உங்கள்  நினைவில் வேறு என்னவெல்லாம் தோன்றுகிறது?  என் கருத்து தவறா?  என்னுடன் பணிபுரியும் சிலரிடம் நேரடியாக இதுபற்றி கேட்டு அவர்களின் கருத்தை பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்த அளவிற்கு என் கருத்தை மாற்றுகிறார்கள் என்பதை!!!!!!!!  நீங்களும்  உங்கள்  எண்ணங்களை  கமென்ட்  பகுதியில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்   


அடுத்த சுத்திர தினத்திற்குள் கண்டிப்பாக யாரவது ஒரு தலைவரை  பற்றியாவது  படித்து  அவரை  பற்றி ஒரு பதிவாவது எழுதுவேன் என்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்.
பொடுசு
பெற்ற சுதந்திரத்தை சிறப்புடன் காப்பது நம் ஒவொருவரின் கடமை என்பதை உணர்ந்தவனாக.... மீண்டும் சுதந்திர தின வாழ்துக்களுடன்.... 

Wednesday, August 11, 2010

ஓடி விளையாடு பாப்பா - 1

இப்போதெல்லாம் ஊருக்கு சென்றால் வீதிகளில் சிறுவர்கள் சிறுமியர்கள் யாரும்விளையாடுவதை  காணமுடிவதில்லை அப்படியே ஒரு சில சிறுவர்களை  பார்த்தாலும் கிரிக்கெட்டை  தவிர  வேறெதுவும்  விளையாடுவதில்லை  காரணம்  இவர்களுக்கு படிப்பு விட்டால் டி.வி பார்ப்பது அதில் பிரபலமான ஒரு சில விளையாட்டுகளை தவிர மற்றவை  தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது  கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ், அல்லது  செல் போனில்  ஆடுவது  மட்டுமே  என்றாகிவிட்டது.இது போன்ற  காரனங்களால்தான்  சிறு வயதிலேயே  பார்வை கோளாறு, எடை கூடுதல், மனஅழுத்தம் (இப்படி  அடுக்கிகொண்டே  போகலாம்) இவையெல்லாம் ஏற்படுகிறது  என்று  மருத்துவ  உலகம்  தெரிவிக்கிறது.  இவையெல்லாம்  நமது  மூத்த  தலை முறையினரிடம்   அவ்வளவு எளிதில் நெருங்கவில்லை அனால் நம்மைவிட இன்றைய  இளைய  தலைமுறையினர்  வெகுவாக இது போன்ற பாதிப்புக்குள்ளாகின்றனர்என்பது மிகையல்ல.


ஆனா பொடுசு அப்படி இல்லைங்க, எப்ப பார்த்தாலும் தெருவுலதான் எதாவது விளையாடிகிட்டே  இருப்பான் . மழை, வெயில், புழுதிக்காற்று  என எந்த சூழலும்  ஏன் யாருமே அவனுக்கு தடையாக இருந்ததில்லை.அப்படி அவன்  விளையாடிய, தெரிந்த, பார்த்து ரசித்த இன்றளவில் நடைமுறையில் இருக்கிறதா என்று சந்தேகத்திற்கிடமான  விளையாட்டுகளின்  ஒரு பிளாஷ் பேக்  இதோ..............


"பம்பரம்" (என்னது ம.தி.மு.க. சின்னமா ஹலோ பொடுசுக்கு அரசியல்  தெரியாதுங்க) இன்றைக்கு பம்பரம் என்பது  தொப்புளில்  விட்டு  விளையாடுவது என்ற  நிலைமைக்கு தள்ளபட்டுவிட்டது (சின்ன  கவுண்டர்  படம்  பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு மேலே தொடரவும்).  ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விளையாட்டு மாறிகிட்டே  இருக்கும்  பம்பர  சீசன்  ஆரம்பிச்சா  ல கடைகளில் தனி  செக்சனே  திறந்து விடுவார்கள்  விதவிதமான வண்ணங்கள், அளவுகளில்  கிடைக்கும்.  இதன்  எடை  மற்றும்  வடிவத்தை வைத்து  நல்ல  பம்பரத்தை  தேர்ந்தெடுத்து  அதற்கு  ஏற்றாற்போல் ஆணி அடித்து கூர் அமைப்பதற்கே தனி திறன் வேண்டும். பிறகு  என்ன  சாட்டையை  பம்பரத்தில்  சுற்றி  தலைக்கு  மேலாக  ஓங்கி தரையை நோக்கி  குத்த  வேண்டும்  அவளோதான். பல விதிமுறைகளுக்கு  உட்பட்டு  வெற்றிபெறுபவர்  தோற்றவரின் அல்லது தோற்ற அணியினரது பம்பரத்தை தனது  பம்பரத்தின்  ஆணியால்   குத்தி (ஆக்கர்)  உடைதுவிடுவர்கள். (அப்பறம் கடைல புது பம்பரம் எப்படி  விக்கிறது). மேலும் செய்முறை  விளக்கங்கள்  தேவைபடுவோர்  மீண்டும்  மீண்டும்  சின்ன கவுண்டர் படத்தை பார்த்து கற்றுக்கொண்டு பயன்பெறவும்.


"கோலி குண்டு" (குண்டுனோன்ன தீவிரவாதிங்க விளையாட்டுன்னு சொல்லகூடாது இது வேற "பளிங்கு") ட்ரவுசர்  பாக்கெட்ல  எப்பவும்  ரெடியா இருக்கும். குறைந்தபட்சம் ரெண்டு பேர்  சேர்ந்துட்டா  போதும்  உடனே  சுவரோரத்தில் ஒரு "ப" வடிவ கட்டம் போட்டு  சிறிய  குண்டுகளை  கட்டத்திற்குள்  வீச வேண்டும் எதிராளி காட்டும் குண்டை  கையில் உள்ள பெரிய  குண்டால்  குறிபார்த்து அடிக்க வேண்டும். இது போல பல விளையாட்டு முறைகள்  உள்ளன. ஒரு முறை காசு வைத்து விளையாடி வீட்டில் மாட்டிக்கொண்டான் பொடுசு அப்பாவிடம் ஒரே ஒரு அறைதான் பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு  தாஜ்மஹால் சென்ற  போதுதான்  மீண்டும் பளிங்கு கற்களை பார்த்தான்.


"கிட்டி புள்ளு / கில்லி" இது பொடுசோட பேவரிட் (படம் இல்ல விளையாட்டு),   கிரிக்கெட் விளையாட்டிற்கு கொள்ளு தாத்தாவாக கருதப்படுவது, எந்த வித  முதலீடும்  தேவையில்லை  யார்  வீட்டிலாவது  உள்ள வேப்பமரம் அல்லது வேறு எதாவது ஒரு நல்ல மரத்தின் ஒன்றரை அடிஉள்ள நீளமுள்ள ஒரு குச்சி போதுமானது ஒரு அடி நீளத்திற்கு ஒரு துண்டும் கிட்டி என்பார்கள், ஆறு முதல் எட்டு இன்ச் உள்ள இருபுறமும்  கூர்மையாக  சீவப்பட்ட  துண்டிற்கு புள்ளு என்றும் பெயர். கிட்டியால்  புள்ளின் நுனியில்  தட்டி எகிறசெய்து  இருமுறை அல்லது மூன்று முறை கீழே  விழாமல் தட்டிவிட்டு பிறகு தூரமாக அடிக்க வேண்டும் புல் விழும் இடத்திலிருந்து ஆரம்ப இடத்திற்கு உள்ள தூரத்தை கிட்டி அளவிலோ அல்லது புள்ளின் அளவிலோ  ஸ்கோராக  கேட்கவேண்டும்  சந்தேகத்தின்  பேரில் எதிராளி அளந்து கேட்ட அளவு இல்லையென்றால் நாம்  அவுட்  சரியான அளவு இருந்தால்  ஆட்டத்தை   தொடரலாம்.  இவ்வாறு  தொடர்ந்து  விளையாடி வெற்றிபெறும் பட்சத்தில் தோற்றவர் அல்லது தோற்ற அணியினர்  மூச்சி  விடாமல் கபடி கபடி என்பதுபோன்று  புள் விழுந்த இடத்திலிருந்து ஆரம்ப கோடு வரை ஓடி வர வேண்டும் ஊருக்கு ஊர் விதி முறைகளும், பெயரும் மாறினாலும் போவோர் வருவோரின் மண்டையை உடைப்பதில் மட்டும் எல்லா ஊரிலும்  ஒன்றுபட்டு இருப்பதே இந்த விளையாட்டின் தனி சிறப்பு எனலாம். (மேலும் இதன் சிறப்புகளை பார்த்திபனின் உள்ளே வெளியே பார்த்து தெரிந்துகொள்ளவும்)


மேலும் சில விளையாட்டுகளை பொடுசு  மற்றுமொரு  பதிவில்  விளையாடுவான்.
                                                                                                                                தொடரும்......


உங்களின் மறக்கமுடியாத விளையாட்டு அனுபவங்கள் அல்லது இதுபோன்ற விளையாட்டுகளை பற்றி கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
           

Wednesday, August 4, 2010

புடிச்சிருக்கு

காலையில் நண்பர் ஒருவர் வேலைக்கு வரவில்லை  என்னானதோ?  விசாரிக்கலாம்  என்று கைபேசியில் அழைத்தேன் தூக்கத்தில் இருந்தவரிடம்....

 
ஹலோ என்னாச்சி வேலைக்கு வரல எதாவது பிரச்சனையா?
ஆமாம் செந்தில் இடுப்பு புடுச்சிருக்கு
யார் இடுப்பு?
என்னோட இடுப்புதான்!
உங்க இடுப்பு உங்கள்ளுக்கு புடிச்சிருக்கு இதுல என்ன பிரச்சனை?
(தூக்கத்தில் ஏதும் புரியாமல் அமைதி காத்தவரிடம் தொடர்ந்தேன்) 
எத்தனை நாளா உங்க இடுப்பு புடிச்சிருக்கு?
நேத்திலேர்ந்துதான்.....
அப்போ அதுக்கு முன்னாடி யார் இடுப்பு புடுச்சிருந்தது?
இப்படிதான் கடுப்பாயிருப்பாரோ?
  புரிந்துகொண்டார் போல திட்டுவதற்கு ஆரம்பித்தார் அழைப்பை  துண்டித்துவிட்டேன் பாவம் மீண்டும் தூங்கினாரோ என்னவோ.
ஆமாம் அப்படி நான் என்னத்த தப்பா கேட்டுட்டேன்???????

 

Sunday, August 1, 2010

யாதும் ஊரே யாவரும் கேளீர்

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று  தமிழ்  கூறும்  நல்லுலகம்  உரைத்தாலும் நம் மனது கேட்பதாயில்லை. சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர்  போல  வராது  என்பது  யாராலும்  மறுக்க  முடியாத உண்மை. நாம் எங்கு சென்றாலும் எத்தனை காலம்  ஆனாலும் பிறந்து வளர்ந்த ஊரின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் அன்றாட  வாழ்கை  முறை இவைதான் நம் அடிப்படையாக அமைகின்றன. சென்ற இடத்திற்காகவோ, வேலைக்காகவோ அல்லது  வசதிகேற்ப மாற்றிக்கொள்ளும் வாழ்கை முறை என்பது போலியான முகமுடியை போன்றதே மாற்றிக்கொண்டே இருக்கலாம் அனால்  வாழ்ந்ததற்கான  ஆத்மார்த்தமான  திருப்தியோ, அர்த்தமோ, சுவடுகளோ இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. 

கவனிக்க வாழ்கை முறை என்பது வேறு வாழ்கை தரம் என்பது வேறு, வாழ்கை தரத்தை மேம்படுத்துவதுதான் மனித வாழவின் ஆதாரம்  அதற்கான தேடலும், முயற்ச்சியும்தான் நம் ஒவ்வொருவருடைய கடின உழைப்பிற்க்கும்,  முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைகிறது  இல்லையேல் இன்னமும் நாம் கற்கால மனிதர்களாகவேதான் இருந்திருப்போம். ஆனால் நமது வாழ்கையின் தரம் வளர்ந்த  வேகத்தில் சிந்தனையின்  தரம் வளரவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்வதற்கு  நமக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது நல்ல புத்தகங்களே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டு அவற்றை தேடி வாங்கி படிப்பது என்பது அதனை எளிதான காரியமாய் எனக்கு தெரியவில்லை. குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் அதிலும் எங்கள் ஊர் போன்ற கிராமத்தில் இருப்பவர்களின் நிலைமை மிகவும் கவலைகிடமானதே. பாடப்புத்தகம் அதிலும் ஆசிரியர் சொல்லிகொடுப்பதை தவிர வேறு ஏதும் அவர்களுக்கு எட்டுவதில்லை. வீடுதோறும் இன்று தொலைகாட்சி பெட்டி வந்துவிட்டாலும் அவற்றின் செயல்பாடுகளும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை பற்றியும் நான் உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வாக நான் கருதுவது "நூலகங்கள்". நல்ல பல நூல்களை தொகுத்து எளிதாக அனைவரும்  பயன்படுத்தும்  வகையில்  இருப்பதே நூலகத்தின் சிறப்பு மேலும் நூலகத்தின் பயன்பாடுகளை பற்றி இந்த ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது. அப்படி ஒரு நூலகம் எங்கள் ஊரிலும் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன் அந்த   நூலகத்தை  முற்றிலுமாக மூடிவிட்டார்கள்  அதற்காக எங்கள் ஊரில் யாரும் இதுவரை வருத்தபட்டதகவோ மீண்டும் நூலகம் திறப்பதற்கு சிறு முயற்சி எடுத்ததாகவோ எந்த தகவலும் இல்லை.

அனால் எப்படியோ சிரமப்பட்டு சுத்துப்பட்டு பத்னெட்டு பட்டியும் மகிழ்சியோட இப்ப எங்க ஊருக்கு தினமும் வந்துபோகும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திறந்தார்கள்!!! என்னென்னு புரியலையா? அதாங்க  டாஸ்மாக். இப்போ எங்க ஊரே  ஜகஜோதியாய்  இருக்கு  தினமும்  சுற்றிவுள்ள பல ஊர்களிலுருந்தும் புதிது புதிதாய் ஆட்கள் வருவதும் போவதுமாய்  இருக்கிறார்கள்.   இப்ப புரிஞ்சுதுங்க இந்த  பதிவோட  முதல்  வாக்கியத்திற்கு அர்த்தம். 
Related Posts with Thumbnails