Wednesday, August 11, 2010

ஓடி விளையாடு பாப்பா - 1

இப்போதெல்லாம் ஊருக்கு சென்றால் வீதிகளில் சிறுவர்கள் சிறுமியர்கள் யாரும்விளையாடுவதை  காணமுடிவதில்லை அப்படியே ஒரு சில சிறுவர்களை  பார்த்தாலும் கிரிக்கெட்டை  தவிர  வேறெதுவும்  விளையாடுவதில்லை  காரணம்  இவர்களுக்கு படிப்பு விட்டால் டி.வி பார்ப்பது அதில் பிரபலமான ஒரு சில விளையாட்டுகளை தவிர மற்றவை  தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது  கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ், அல்லது  செல் போனில்  ஆடுவது  மட்டுமே  என்றாகிவிட்டது.இது போன்ற  காரனங்களால்தான்  சிறு வயதிலேயே  பார்வை கோளாறு, எடை கூடுதல், மனஅழுத்தம் (இப்படி  அடுக்கிகொண்டே  போகலாம்) இவையெல்லாம் ஏற்படுகிறது  என்று  மருத்துவ  உலகம்  தெரிவிக்கிறது.  இவையெல்லாம்  நமது  மூத்த  தலை முறையினரிடம்   அவ்வளவு எளிதில் நெருங்கவில்லை அனால் நம்மைவிட இன்றைய  இளைய  தலைமுறையினர்  வெகுவாக இது போன்ற பாதிப்புக்குள்ளாகின்றனர்என்பது மிகையல்ல.


ஆனா பொடுசு அப்படி இல்லைங்க, எப்ப பார்த்தாலும் தெருவுலதான் எதாவது விளையாடிகிட்டே  இருப்பான் . மழை, வெயில், புழுதிக்காற்று  என எந்த சூழலும்  ஏன் யாருமே அவனுக்கு தடையாக இருந்ததில்லை.அப்படி அவன்  விளையாடிய, தெரிந்த, பார்த்து ரசித்த இன்றளவில் நடைமுறையில் இருக்கிறதா என்று சந்தேகத்திற்கிடமான  விளையாட்டுகளின்  ஒரு பிளாஷ் பேக்  இதோ..............


"பம்பரம்" (என்னது ம.தி.மு.க. சின்னமா ஹலோ பொடுசுக்கு அரசியல்  தெரியாதுங்க) இன்றைக்கு பம்பரம் என்பது  தொப்புளில்  விட்டு  விளையாடுவது என்ற  நிலைமைக்கு தள்ளபட்டுவிட்டது (சின்ன  கவுண்டர்  படம்  பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு மேலே தொடரவும்).  ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விளையாட்டு மாறிகிட்டே  இருக்கும்  பம்பர  சீசன்  ஆரம்பிச்சா  ல கடைகளில் தனி  செக்சனே  திறந்து விடுவார்கள்  விதவிதமான வண்ணங்கள், அளவுகளில்  கிடைக்கும்.  இதன்  எடை  மற்றும்  வடிவத்தை வைத்து  நல்ல  பம்பரத்தை  தேர்ந்தெடுத்து  அதற்கு  ஏற்றாற்போல் ஆணி அடித்து கூர் அமைப்பதற்கே தனி திறன் வேண்டும். பிறகு  என்ன  சாட்டையை  பம்பரத்தில்  சுற்றி  தலைக்கு  மேலாக  ஓங்கி தரையை நோக்கி  குத்த  வேண்டும்  அவளோதான். பல விதிமுறைகளுக்கு  உட்பட்டு  வெற்றிபெறுபவர்  தோற்றவரின் அல்லது தோற்ற அணியினரது பம்பரத்தை தனது  பம்பரத்தின்  ஆணியால்   குத்தி (ஆக்கர்)  உடைதுவிடுவர்கள். (அப்பறம் கடைல புது பம்பரம் எப்படி  விக்கிறது). மேலும் செய்முறை  விளக்கங்கள்  தேவைபடுவோர்  மீண்டும்  மீண்டும்  சின்ன கவுண்டர் படத்தை பார்த்து கற்றுக்கொண்டு பயன்பெறவும்.


"கோலி குண்டு" (குண்டுனோன்ன தீவிரவாதிங்க விளையாட்டுன்னு சொல்லகூடாது இது வேற "பளிங்கு") ட்ரவுசர்  பாக்கெட்ல  எப்பவும்  ரெடியா இருக்கும். குறைந்தபட்சம் ரெண்டு பேர்  சேர்ந்துட்டா  போதும்  உடனே  சுவரோரத்தில் ஒரு "ப" வடிவ கட்டம் போட்டு  சிறிய  குண்டுகளை  கட்டத்திற்குள்  வீச வேண்டும் எதிராளி காட்டும் குண்டை  கையில் உள்ள பெரிய  குண்டால்  குறிபார்த்து அடிக்க வேண்டும். இது போல பல விளையாட்டு முறைகள்  உள்ளன. ஒரு முறை காசு வைத்து விளையாடி வீட்டில் மாட்டிக்கொண்டான் பொடுசு அப்பாவிடம் ஒரே ஒரு அறைதான் பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு  தாஜ்மஹால் சென்ற  போதுதான்  மீண்டும் பளிங்கு கற்களை பார்த்தான்.


"கிட்டி புள்ளு / கில்லி" இது பொடுசோட பேவரிட் (படம் இல்ல விளையாட்டு),   கிரிக்கெட் விளையாட்டிற்கு கொள்ளு தாத்தாவாக கருதப்படுவது, எந்த வித  முதலீடும்  தேவையில்லை  யார்  வீட்டிலாவது  உள்ள வேப்பமரம் அல்லது வேறு எதாவது ஒரு நல்ல மரத்தின் ஒன்றரை அடிஉள்ள நீளமுள்ள ஒரு குச்சி போதுமானது ஒரு அடி நீளத்திற்கு ஒரு துண்டும் கிட்டி என்பார்கள், ஆறு முதல் எட்டு இன்ச் உள்ள இருபுறமும்  கூர்மையாக  சீவப்பட்ட  துண்டிற்கு புள்ளு என்றும் பெயர். கிட்டியால்  புள்ளின் நுனியில்  தட்டி எகிறசெய்து  இருமுறை அல்லது மூன்று முறை கீழே  விழாமல் தட்டிவிட்டு பிறகு தூரமாக அடிக்க வேண்டும் புல் விழும் இடத்திலிருந்து ஆரம்ப இடத்திற்கு உள்ள தூரத்தை கிட்டி அளவிலோ அல்லது புள்ளின் அளவிலோ  ஸ்கோராக  கேட்கவேண்டும்  சந்தேகத்தின்  பேரில் எதிராளி அளந்து கேட்ட அளவு இல்லையென்றால் நாம்  அவுட்  சரியான அளவு இருந்தால்  ஆட்டத்தை   தொடரலாம்.  இவ்வாறு  தொடர்ந்து  விளையாடி வெற்றிபெறும் பட்சத்தில் தோற்றவர் அல்லது தோற்ற அணியினர்  மூச்சி  விடாமல் கபடி கபடி என்பதுபோன்று  புள் விழுந்த இடத்திலிருந்து ஆரம்ப கோடு வரை ஓடி வர வேண்டும் ஊருக்கு ஊர் விதி முறைகளும், பெயரும் மாறினாலும் போவோர் வருவோரின் மண்டையை உடைப்பதில் மட்டும் எல்லா ஊரிலும்  ஒன்றுபட்டு இருப்பதே இந்த விளையாட்டின் தனி சிறப்பு எனலாம். (மேலும் இதன் சிறப்புகளை பார்த்திபனின் உள்ளே வெளியே பார்த்து தெரிந்துகொள்ளவும்)


மேலும் சில விளையாட்டுகளை பொடுசு  மற்றுமொரு  பதிவில்  விளையாடுவான்.
                                                                                                                                தொடரும்......


உங்களின் மறக்கமுடியாத விளையாட்டு அனுபவங்கள் அல்லது இதுபோன்ற விளையாட்டுகளை பற்றி கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
           

2 comments:

Unknown said...

தம்பி செந்தில்,
இதை இதை தான் நான் உங்களிடம்
இருந்து எதிர் பார்த்தேன்.
சொல்ல வந்த mattera அழகா
perfect- ஆ சொல்லி இருக்கீங்க.
superb .

Abdulcader said...

ஓடி விளையாடு பாப்பா மிகவும் அருமையாக இருக்கிறது.அப்படியே குழந்தைபருவத்தை
ஞாபகபடுத்துகிறது.நானும் சிறுவயதில் பம்பரம்
விளையாடுவதற்காக அம்மாவிடம் பைசாவை ஆடைய போட்டுவிட்டு புதிய பம்பரம் வாங்கி
அதற்கு ஆணி அடிப்பதற்கு கொல்லப்பட்டரைக்கு சென்று ஆசாரிஇடம் கொடுத்து நல்ல கூர்மையாக ஆணி அடித்துக்கொண்டு விளையாடுவது வழக்கம்.
அதையெல்லாம் நினைக்கும் போது மனசெல்லாம்
மகிழ்சியாக இருக்கிறது.விளையாட்டில் தொல்வியுற்றவனின் பம்பரத்தை மற்ற
பம்பரத்தின் ஆணியால் குத்தி குத்திவுடைப்பது Really funny....
அது இந்த தலைமுறை இடம் இல்லாதது வருத்த்திருவுரியது.

Post a Comment

Related Posts with Thumbnails